9.5 லட்சம் வாக்காளர்களை கொண்ட புதுவையில் தெருவுக்கு ஒரு கட்சி என்கிற நிலைமை உருவாகியுள்ளது. சராசரியாக ஒரு தொகுதிக்கு 25 ஆயிரம் வாக்காளர்களை மட்டுமே கொண்டிருப்பதால், பெரும் பணக்காரர்கள் எப்படியோ ப விட்டமினை தண்ணீராக செலவழித்து எம்எல்ஏவாகிவிட வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டு உள்ளனர். 6 சி இருந்தால் போதும் என்கிற நிலையில் திடீர் வேட்பாளர்கள், திடீர் கட்சி, மக்கள் நல இயக்கம், தங்களது அப்பா, அம்மா பெயரில் அறக்கட்டளை என தூள் கிளப்பிக்கொண்டுள்ளனர்.
அந்த வரிசையில் தற்போதுவரை நமது மக்கள் கழகம், தேசிய மக்கள் முன்னணி, செங்கோல் மக்கள் முன்னேற்ற கழகம், புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழகம், ஆம் ஆத்மி கட்சி தலைமையில் புதுச்சேரி மக்கள் பாதுகாப்பு கூட்டணி என வாயில் நுழைய முடியாத பெயரில் உள்ள கட்சிகளெல்லாம் சேர்ந்து ஒரு கூட்டணி என அதம்பண்ணிகொண்டிருக்கிறார்கள்.
ஆனால், தேர்தல் தேதி அறிவித்தவுடன் இதில் எவையெல்லாம் தேர்தலில் பங்கேற்குமோ அல்லது அந்தந்த தொகுதி முக்கிய பிரமுகர்கள், பெரிய கட்சிகளிடம் வாங்க வேண்டியதை வாங்கி ஓடிவிடுமோ என்பதுதான் இப்போதைய புதுச்சேரி நிலவரம். கட்சி ஆரம்பிக்கிறவங்க எல்லாம் ஒரு திட்டத்தோடுதான் ஆரம்பித்திருப்பதாக கூறுகின்றனர்.
ஆனால், யாரிடமாவது சரணடைந்து விடுகின்றனர். சமீபத்தில் புதிதாக கட்சி தொடங்கிய லாட்டரி அதிபர் மார்ட்டினும் அமித்ஷாவிடம் சரணடைந்து விட்டார். சிலரோ லெட்டர் பேடு வைத்து கத்தியை சுழற்றுகிறார்கள். யாராவது கூட்டணிக்கு கூப்பிடுங்கப்பா எனக்கூவிக் கொண்டிருந்தாலும், ஒருவரும் அழைப்பதில்லை என்ற விரக்தியில் குட்டி தலைவர்கள் துண்டு போட்டு வலம் வருகின்றனர்.
