இந்தூரில் சுகாதாரமற்ற குடிநீர் குடித்து 8 பேர் உயிரிழப்பு: 1000 பேர் பாதிப்பு

மத்தியப்பிரதேசம்: மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் சுகாதாரமற்ற குடிநீரை குடித்த 8 பேர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்த நிலையில் 1000க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தூர் பகிரத்புரா பகுதியில் சுகாதாரமற்ற குடிநீரை குழாய்கள் மூலம் மாநகராட்சி விநியோகித்தது. 8 முறை இந்தியாவின் தூய்மையான நகரம் என்று விருது பெற்ற இந்தூரில் பல வாரங்களாக சுகாதாரமற்ற குடிநீர் விநியோகம் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. குடிநீர் குழாயில் கசிவு என்றும் சுகாதாரமற்ற குடிநீர் விநியோகிப்பதாகவும் இவ்வாண்டு தொடக்கத்திலேயே புகார் தெரிவிக்கப்பட்டது. நர்மதா நதியில் இருந்து இந்தூர் மாநகராட்சியால் விநியோகிக்கப்பட்ட குடிநீரை பருகியதால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

இத்தகைய சுகாதாரமற்ற குடிநீரை குடித்து 8 பேர் உயிரிழந்த நிலையில், 1000 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இத்தகைய வாந்தி, வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாதிப்புக்கு உள்ளான பகிரத்புரா ம.பி. மாநில நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் கைலாஷ் விஜய் வர்கியாவின் தொகுதிக்கு உட்பட்டது. குடிநீர் குழாயில் ஏற்பட்ட கசிவு மற்றும் அதன் அருகில் உள்ள கழிப்பறைதான் பாதிப்புக்கு காரணம் என இந்தூர் மாநகராட்சி ஆணையர் திலீப் யாதவ் தெரிவித்தார். இந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்களை பார்வையிட்ட பாஜக அமைச்சர் கைலாஷ், இலவசமாக சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகளுக்கு உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் தலா ரூ.2 லட்சம் இழப்பீடு அறிவித்தார்.

Related Stories: