கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம்; தவெக நிர்வாகிகளிடம் 3வது நாளாக விசாரணை: மீண்டும் சம்மன் அனுப்ப சிபிஐ முடிவு

 

புதுடெல்லி: கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் தலைவரான நடிகர் விஜய் பங்கேற்று உரையாற்றிய இந்த கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தை முதலில் தமிழ்நாடு காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் வழக்கு விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று அதிநவீன கருவிகள் மூலம் தடயங்களை சேகரித்ததுடன், வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கக்கோரி தவெக நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பியிருந்தனர். இந்நிலையில், சிபிஐ எஸ்.பி சுனில்குமார் தலைமையிலான அதிகாரிகள் முன்னிலையில் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் கடந்த 3 நாட்களாக விசாரணை நடைபெற்றது.

இதில் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் ஆகியோரும், கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கய்யா உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் இன்று ஆஜராகினர். விசாரணைக்கு பின் இதுகுறித்து தவெக இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் கூறுகையில், ‘கூட்ட நெரிசல் விவகாரத்தில் சிபிஐ அதிகாரிகள் கேட்ட பல்வேறு அடுக்கடுக்கான கேள்விகளுக்கு வீடியோ ஆதாரங்களுடன் விளக்கம் அளித்துள்ளோம்.

விசாரணைக்காக மீண்டும் சம்மன் அனுப்பப்படும் என அதிகாரிகள் எங்களிடம் தெரிவித்துள்ளனர். எப்போது அழைத்தாலும் நேரில் ஆஜராகி விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க தயாராக இருக்கிறோம்’ என்று தெரிவித்தார். வரும் ஜனவரில் விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டு, அவரிடமும் விசாரணை நடத்தப்படும் என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories: