பீர் பாட்டிலுடன் மக்களை அச்சுறுத்தும் வகையில் காரில் சென்ற 2 வாலிபர்கள்

கடலூர், டிச. 30: கடலூரில் காரின் மேல் பகுதியை திறந்து பீர் பாட்டிலுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் உலா சென்ற 2 வாலிபர்கள் மீது 5 பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் அருகே கோண்டூர், நெல்லிக்குப்பம் சாலையில் ஒரு காரில் இரண்டு நபர்கள் காரின் மேல் பகுதியை திறந்து வைத்துக்கொண்டு மேல்சட்டை போடாமல், கையில் பீர் பாட்டிலுடன், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கூச்சல் போட்டுக்கொண்டு செல்வதாக கடலூர் எஸ்பி ஜெயக்குமாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, அந்த நபர்களை பிடித்து வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு எஸ்பி உத்தரவு பிறப்பித்தார்.

அதன்பேரில் கடலூர் டிஎஸ்பி தமிழ்இனியன் மேற்பார்வையில், கடலூர் புதுநகர் காவல் நிலைய எஸ்ஐ பிரசன்னா மற்றும் போலீசார் உடனடியாக விரைந்து சென்று கோண்டூர் அருகே அந்த காரை மடக்கி பிடித்து, காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர்கள் விழுப்புரம் வி.அகரம் முருகன் கோயில் தெருவை சேர்ந்த காமராஜ் மகன் சத்தியமூர்த்தி (36), புதுவை மாநிலம் வில்லியனூர் பகுதியைச் சேர்ந்த அர்ஜுனன் மகன் வசந்த் (37) என்பது தெரியவந்தது. இவர்கள் இருவர் மீது குடிபோதையில், அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல், பொதுமக்களை அச்சுறுத்தல், அதிவேகமாக வாகனத்தை ஓட்டுதல், சீட் பெல்ட் அணியாமல் வாகனத்தை ஓட்டுதல் ஆகிய 5 பிரிவின் கீழ் கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: