கொடைக்கானல்: கொடைக்கானலில் பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் விழிப்புணர்வு வழங்கப்பட்டது. கொடைக்கானலில் மலைப்பகுதியில் பொதுமக்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் இடையூறு இல்லாமல் பேருந்துகளை இயக்க, கொடைக்கானல் அரசு போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் ராதாகிருஷ்ணன், பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு அறிவுரைகள் மற்றும் விழிப்புணர்வு வழங்கினார்.
அதில், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஏறும் இடங்களில் முறையாக பேருந்தை நிறுத்தி ஏற்றிச் செல்லவும், அவர்கள் குறிப்பிடும் இடங்களில் இறக்கி விட்டுச் செல்லவும், பேருந்து ஓட்டுநர்கள் பேருந்தை இயக்கும் நேரங்களில் அலைபேசி பயன்படுத்துவது அல்லது ஹெட் போன் போன்ற கருவிகளை பயன்படுத்துவதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும், நெரிசலான இடங்களில் அதிவேகமாக பேருந்தை இயக்க கூடாது என்றும், மலைச்சாலைகளில் மிதவேகமாக பேருந்து இயக்க வேண்டும் என்றும், பாதுகாப்பான பயணத்தை பொதுமக்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கு வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
பேருந்து பயணிகளிடம் கனிவான போக்கை கடைபிடிக்க வேண்டும், பயணிகளின் நலன் கருதி மலைச்சாலைகளில் அவர்கள் குறிப்பிடும் இடங்களில் நிறுத்தி ஏற்றிச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டது.
