திருவண்ணாமலை: விவசாயிகளை பாதிக்கும் சட்டங்களை ஆதரித்து, விவசாயி வேடமிட்டு சிலர் அரசியல் செய்வார்கள் என்று திருவண்ணாமலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில், மாநகராட்சி அலுவலகம் எதிரில் வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில் இரண்டு நாட்கள் நடைபெறும் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மேலும், அங்கு அமைக்கப்பட்டிருந்த அரசின் திட்டங்களை விளக்கும் 200க்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்குகளை முதல்வர் பார்வையிட்டார். வேளாண் திட்ட பயனாளிகளிடம் கலந்துரையாடினார். அதைத்தொடர்ந்து, 518 விவசாயிகளுக்கு ரூ.9.43 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி, முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
வேளாண் துறையும், உழவர்களும் சந்தித்துக் கொண்டிருக்கின்ற பிரச்னைகளை களைந்து, விவசாயத்தில் ஈடுபடுபவர்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பது தான், நாம் ஆட்சிப்பொறுப்பு ஏற்றவுடனே, வேளாண்மைத்துறை என்று இருந்த பெயரை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை என்று மாற்றினோம்.
சிலர், பெயரை எல்லாம் இஷ்டத்துக்கு மாற்றுவார்கள். ஆனால், விவசாயிகளை தவிக்கவிட்டு, நடுத்தெருவில் போராடவிடுவார்கள். இன்னும் சிலர், விவசாயி வேடமிட்டு, அரசியல் செய்வார்கள். ஆனால், விவசாயிகளை பாதிக்கின்ற சட்டங்களை ஆதரிப்பார்கள். விவசாயிகளின் போராட்டத்தை கொச்சைப்படுத்துவார்கள். ஆனால், நம்முடைய திராவிட மாடல் அரசில், விவசாயிகளின் நலனும், வளர்ச்சியும்தான் முக்கியம்.
அதனால் தான் பயிர் உற்பத்தி மற்றும் உற்பத்தி திறன் ஆகியவற்றை உயர்த்தி, விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என்று நினைத்தோம். அதற்காக, வேளாண்மைக்கென்று தனி பட்ஜெட்டை அமைக்க ஆரம்பித்தோம். இதுவரைக்கும், ஏராளமான திட்டங்களை அறிவித்து, 5 அக்ரி-பட்ஜெட் தாக்கல் செய்துவிட்டோம். இந்த 5 அக்ரி-பட்ஜெட்டையும் சேர்த்து, ஒரு லட்சத்து 94 ஆயிரம் கோடி நிதியை விவசாயிகளுக்காக ஒதுக்கியிருக்கிறோம்.
குறிப்பாக, ஐந்தாவது அக்ரி-பட்ஜெட்டில் மட்டும் 45 ஆயிரத்து 661 கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கிறோம். இது, 2021-22 உடன் ஒப்பிட்டால், 33 சதவீதம் அதிகம். அதுமட்டுமா, வளர்ந்து வருகின்ற தொழில்நுட்பத்துக்கு ஏற்ப, விவசாயத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று தேவையான மின்னணு சாகுபடித் தொழில்நுட்பங்கள், பாதுகாக்கப்பட்ட சூழல் சாகுபடி, நன்னெறி வேளாண் முறைகள், சந்தை சார் சாகுபடி, உணவு பதப்படுத்துதல், மதிப்புக்கூட்டுதல் என்று எல்லாவற்றிற்கும் திட்டங்கள் வகுத்து செயல்படுத்துகிறோம்.
கடந்த 5 ஆண்டுகளாக, மேட்டூர் அணையை, கரெக்டாக திறக்கிறோம். அதனுடைய 20 லட்சம் விவசாயிகள் பயனடைகின்ற வகையில், ரூ.481 கோடி செலவில், குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் கொண்டு வந்திருக்கிறோம். இந்த ஆண்டு, முதன்முறையாக, டெல்டா அல்லாத மாவட்டங்களில், கார்-குறுவை-சொர்ணவாரிப் பருவங்களில் நெல் சாகுபடிக்கான சிறப்புத் தொகுப்பு திட்டத்தை ரூ.132 கோடியில் செயல்படுத்தியிருக்கிறோம்.
முந்தைய ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளாமல் கைவிட்ட 125 உழவர் சந்தைகளை நவீன வசதிகளுடன் புனரமைத்ததோடு, 14 புதிய உழவர் சந்தைகளையும் நாம் அமைத்திருக்கிறோம். இந்தக் கண்காட்சியும், உங்கள் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். நம்முடைய ஆட்சியின் சாதனைத் திட்டங்களுக்கு சாட்சிதான் இத்தகைய கண்காட்சி. எனவே, இந்தக் கண்காட்சியில் இருக்கின்ற பயனுள்ள தகவல்களை, தொழில்நுட்பங்களை, விவசாயிகள் சிறப்பாக பயன்படுத்தி, அதிக விளைச்சலையும், விலையையும் பெற்று முகத்திலும், உள்ளத்திலும், புன்சிரிப்போடு வாழவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் தர்ப்பகராஜ், எம்பிக்கள் சி.என்.அண்ணாதுரை, எம்.எஸ்.தரணிவேந்தன், எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி, பெசுதி.சரவணன், எஸ்.அம்பேத்குமார், ஓ.ஜோதி, மாநகராட்சி மேயர் நிர்மலாவேல்மாறன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
* திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளுக்கு
* முத்தான 2 திட்டங்கள் அறிவிப்பு
* நிகழ்ச்சியில், முதல்வர் வெளியிட்ட புதிய அறிவிப்புகள் விபரம்:
* திருவண்ணாமலை விற்பனைக் குழுவில், வாடகை கட்டடத்தில் இயங்கி வரக்கூடிய பெரணமல்லூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு புதிதாக 500 மெட்ரிக் டன் கொண்ட சிறப்புக் கிடங்கு அலுவலகத்துடன் கூடிய பரிவர்த்தனைக் கூடம் மற்றும் விவசாயிகளின் ஓய்வு அறை, ரூ.3 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.
* வேளாண் விளைப்பொருட்களை உலர்த்தி, சுத்தப்படுத்தி, விற்பனை செய்வதற்கு ஏதுவாக திருவண்ணாமலை விற்பனைக் குழு கட்டுப்பாட்டில் செயல்படும், சேத்துப்பட்டு, போளூர் மற்றும் வந்தவாசி ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில், 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய உலர்களங்கள் அமைக்கப்படும் என்றார்.
