பல்லடம், டிச.27: ஜனவரி 1ம் தேதி முதல் கறிக்கோழி உற்பத்தி நிறுத்த போராட்டம் நடைபெறும் என கோழிப்பண்ணை விவசாயிகள் ஆலோசனைக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. பல்லடத்தில் கறிக்கோழி பண்ணை விவசாயிகள் ஆலோசனைக்கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி தலைமை தாங்கினார்.
இதில் கறிக்கோழி பண்ணை விவசாயிகள் ஒருங்கிணைப்பாளர் மகாலிங்கம், திருப்பூர் மாவட்ட செயலாளர் ரமேஷ், மற்றும் கறிக்கோழி வளர்ப்பு பண்ணையாளர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கறிக்கோழி பண்ணையாளர்களின் கூலி உயர்வு உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் கறிக்கோழி உற்பத்தி நிறுத்த போராட்டம் நடத்துவது, 2-வது கட்டமாக சென்னையில் உள்ள கால்நடை பராமரிப்புத்துறை இயக்குனர் அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது.
பின்னர் கிராமங்களுக்கு வரும் கோழிக்குஞ்சு உற்பத்தி நிறுவன வாகனங்களை தடுப்பது, அடுத்து கறிக்கோழி தீவனம் உற்பத்தி செய்யும் ஆலைகள் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
