×

இந்தியா-நியூசிலாந்து இடையே வரியில்லா வர்த்தக ஒப்பந்தம்

திருப்பூர், டிச. 23: ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் துணைத்தலைவர் டாக்டர் ஆ. சக்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்தியா- நியூசிலாந்து இடையே வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் வெற்றிகரமாக நிறைவு பெற்றதற்கு வரவேற்பு தெரிவிக்கிறேன். இது குறிப்பாக தொழிலாளர் அதிகம் சார்ந்த ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைத் துறைக்கு மிகப் பெரிய மைல்கல்லாக அமையும். இந்தியாவின் உலகளாவிய வர்த்தக விரிவாக்கத்திற்காக தொலைநோக்கு தலைமையும், உறுதியான அர்ப்பணிப்பையும் வழங்கி வரும் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றியை தெரிவிக்கிறேன்.

மேலும், இந்த முக்கியமான வர்த்தக ஒப்பந்தத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ய செயல்பட்ட வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கும் நன்றி. இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் நியூசிலாந்து சந்தையில் 100 சதவீதம் வரி விலக்கு வழங்கப்படும். குறிப்பாக ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை பொருட்களுக்கு, முந்தைய 10 சதவீத கட்டண நிலைகளிலிருந்து பூஜ்ஜிய வரிக்கு மாறும். 2024-ம் ஆண்டிற்கான நியூசிலாந்தின் மொத்த ஆயத்த ஆடை இறக்குமதி மதிப்பு ரூ.10,394 கோடி ஆகும், இதில் பின்னலாடைகள் ரூ.5,424 கோடியின் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளன. நியூசிலாந்திற்கான இந்தியாவின் ஆடை ஏற்றுமதி தற்போது ரூ.460 கோடியாக உள்ளது. இது நியூசிலாந்தின் மொத்த இறக்குமதியில் 4.40 சதவீத பங்கைக் கொண்டுள்ளது.

இந்தியாவின் பின்னலாடைகள், நியூசிலாந்துக்கு ஏற்றுமதி செய்யப்படும் மொத்த ஆடை ஏற்றுமதியில் சுமார் 52 சதவீதம் பங்கைக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா-நியூசிலாந்து இடையே வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் அமல்படுவதன் மூலம், இந்திய ஏற்றுமதியாளர்கள் குறிப்பாக பின்னலாடைகளில் தங்கள் சந்தைப் பங்கை கணிசமாக விரிவுபடுத்தவும், இந்த வளர்ந்து வரும் தங்களின் சந்தைப் பங்கினை கணிசமாக உயர்த்தவும் உதவியாக இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : India ,New Zealand ,Tiruppur ,Vice President ,Ready-Made Clothing Export Development Council ,Dr. ,A. Shaktivel ,
× RELATED இலவச மருத்துவ முகாம் எம்எல்ஏ துவக்கி வைத்தார்