ஹரித்வாரில் நீதிமன்ற விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஒரு குற்றவாளி மீது துப்பாக்கிச் சூடு!

டேராடூன்: ஹரித்வாரில் நீதிமன்ற விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஒரு குற்றவாளி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. துப்பாக்கி சூட்டில் இரண்டு காவலர்கள் காயமடைந்தனர்.

உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டத்தில் உள்ள லக்ஸர் பகுதியில் பட்டப்பகலில் நடந்த ஒரு பயங்கர துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒட்டுமொத்த மாநிலத்தையும் உலுக்கியுள்ளது. சிறையில் இருந்து நீதிமன்ற விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பிரபல ரவுடியை குறிவைத்து மர்ம நபர்கள் நடத்திய இந்த தாக்குதலில், பாதுகாப்பு பணியில் இருந்த இரண்டு காவலர்களும் காயமடைந்தனர்.

ரூர்க்கி சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரபல குற்றவாளி வினய் தியாகி, இன்று சிறப்பு போலீஸ் வாகனத்தில் லக்ஸர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்துச் செல்லப்பட்டார். வாகனம் லக்ஸர் மேம்பாலத்தின் மீது சென்றுகொண்டிருந்தபோது, ஏற்கனவே அங்கு மறைந்திருந்த பைக்கில் வந்த இரண்டு மர்ம நபர்கள் திடீரென வாகனத்தை வழிமறித்தனர்.

அவர்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கிகளால் வினய் தியாகியை நோக்கி சரமாரியாக சுடத் தொடங்கினர். இந்தத் தாக்குதலில் குற்றவாளியின் உடலில் குண்டுகள் பாய்ந்து அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். தடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு காவலர்களும் இந்த துப்பாக்கிச் சூட்டில் சிக்கி காயமடைந்தனர்.

துப்பாக்கிச் சத்தத்தைக் கேட்ட வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அச்சத்தில் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் ஸ்தம்பித்தது. காயமடைந்த குற்றவாளி மற்றும் இரண்டு காவலர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: