இறந்த மனைவியின் படத்தை ஸ்டேட்டஸ் வைத்து ‘நான் உன்னிடமே வருகிறேன்’: ஓட்டல் அறையில் வாலிபர் தற்கொலை

 

 

பரபங்கி: உத்தர பிரதேசத்தில் முதல் மனைவியின் புகைப்படத்தை வாட்ஸ்அப்பில் பகிர்ந்துவிட்டு, மன்னித்துவிடுங்கள் எனக்கூறி இளைஞர் ஒருவர் ஓட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் பரபங்கி மாவட்டம் ஜலால்பூர் கிராமத்தைச் சேர்ந்த அலோக் வர்மா (27) என்பவரின் முதல் மனைவி ஏற்கனவே இறந்துவிட்டார். இதையடுத்து அவர் மறுமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே மன உளைச்சலில் இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இவர் அடிக்கடி ராதே நகர் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்குச் சென்று தங்குவதை வழக்கமாக வைத்திருந்தார்.

இந்த சூழலில், நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் அந்த ஓட்டலுக்குச் சென்ற அவர், 110ம் எண் கொண்ட அறையை எடுத்து தங்கியுள்ளார். இந்நிலையில், மறைந்த தனது முதல் மனைவியின் புகைப்படத்தை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் பகிர்ந்த அலோக் வர்மா, அதில் ‘நான் உன்னிடமே வருகிறேன், அனைவரும் என்னை மன்னித்து விடுங்கள்’ என்று உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். மறுநாள் (நேற்று) காலை நீண்ட நேரமாகியும் ஓட்டல் அறை கதவு திறக்கப்படாததாலும், உள்ளே செல்போன் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருந்ததாலும் சந்தேகமடைந்த ஊழியர்கள் கதவை உடைத்து பார்த்தனர். அப்போது அவர் மின்விசிறியில் பிளாஸ்டிக் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து ஓட்டல் மேலாளர் அன்ஷிக் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த நகர காவல் நிலைய அதிகாரி சுதிர் குமார் சிங் தலைமையிலான போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: