ஊட்டி : கீழ்தொரைஹட்டி அருந்ததி சுய உதவிக்குழுவினர் நீலகிரி மாவட்ட கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: நாங்கள் கீழ்தொரைஹட்டி பகுதியில் வசித்து வருகிறோம். நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, தொரைஹட்டி கிளையில் கடந்த 01.07.2025 அன்று அருந்ததி மகளிர் சுய உதவிக்குழு சார்பாக விவசாயக் கடன் வேண்டி விண்ணப்பித்திருந்தோம். கடன் விண்ணப்பம் சமர்பித்து 5 மாதங்கள் ஆகிய நிலையில் வங்கி தரப்பில் இருந்து இதுவரை எந்த ஒரு முறையான பதிலும் அளிக்கவில்லை.
நாங்கள் பலமுறை வங்கிக்கு நேரில் சென்று கேட்டபோதும் அதிகாரிகள் முறையான காரணத்தை கூறாமல் காலதாமதம் ஏற்படுத்தி வருகின்றனர். கடன் கிடைப்பதில் ஏற்பட்ட இந்த நீண்ட காலதாமதத்தால் எங்களது விவசாய பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், நாங்கள் பெரும் நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளோம். எனவே, எங்களுக்கு கடன் உதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.
மாற்றுத்தி திறனாளி பெண் ஜாஸ்மின் கூறியதாவது: இந்திரா நகர் மாற்றுத் திறனாளிகள் காலனியில் வசித்து வருகிறோம். நாங்கள் எம்ராய்டரி வேலை செய்து வருகிறோம். இதில், ஒருவர் ஓவியம் வரைந்து கொடுப்பார்.
எங்களது கைவினை பொருட்களை விற்பனை செய்வதற்காக எங்களுக்கு ஒரு கடை ஒதுக்கீடு செய்து வேண்டும் என மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்திருந்தோம். எங்களுக்கு கடை ஒதுக்கீடு செய்து கொடுத்தால், நாங்கள் தயாரிக்கும் கைவினை பொருட்களை விற்பனை செய்து வாழ்க்கையை நடத்திக் கொள்வோம். இவ்வாறு அவர் கூறினார்.
பழங்குடி கிராமத்திற்கு சாலை வசதி கேட்டு மனு: எங்கள் கிராமத்தில் 24 காட்டு நாயக்கர் (பழங்குடியினர்) குடும்பங்கள் வசித்து வருகிறோம். இங்குள்ள பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு வேறு பகுதிக்கு செல்வதற்கு போதுமான சாலை வசதி கிடையாது. இதனால், நாங்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். எனவே, எங்கள் கிராமத்திற்கு சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.
