*போலீசார் விசாரணை
தியாகதுருகம் : தியாகதுருகம் அடுத்த சாத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகவேல் மகன் அருண்குமார் (25). இவரும் இவரது நண்பரான அதே பகுதியை சேர்ந்த தாமோதரன் மகன் பார்த்திபன் (25) என்பவரும், கள்ளக்குறிச்சி சென்று விட்டு நேற்று இரவு மீண்டும் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளனர்.
அப்போது கனவூர் கிராமம் அருகே வந்து கொண்டிருக்கும்போது இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த அருண்குமார் நிலைத்தடுமாறி அருகில் இருந்த வயல்வெளிக்குள் வாகனத்தை இறக்கியுள்ளார். எதிர்பாராத விபத்தில் அருண்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதில் பார்த்திபனுக்கு பலத்த காயம் ஏற்பட்டு கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவ இடத்துக்கு வந்த வரஞ்சரம் காவல் நிலைய போலீசார், அருண்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் தியாகதுருகம் அடுத்த கொங்கராயபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அர்ஜுனன் மகன் ஆனந்தபாபு (27). இவர் நேற்று இரவு வீட்டிலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் வேப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது இடது புறமாக நின்றிருந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக அதிவேகமாக சென்று மோதியுள்ளார்.
பின்பக்கம் மோதியதில் ஆனந்தபாபுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் ஆனந்தபாபுவை மீட்டு கள்ளக்குறிச்சி தலைமை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு ஆனந்தபாவுக்கு தீவிர சிகிச்சை அளித்தும் எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். இதுகுறித்து வரஞ்சரம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
