கொள்ளிடத்தில் குப்பைகளால் நிறைந்துள்ள பாசன வடிகால் வாய்க்கால்

*தூர்வார கோரிக்கை

கொள்ளிடம் : கொள்ளிடத்தில் பாசன வாய்க்காலில் குப்பைகள் நிறைந்துள்ளதால் அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடத்திலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் பிரதான தெற்கு ராஜன் வாய்க்காலிலிருந்து கிளை வாய்க்காலாக பிரிந்து வரும் அனுமந்தபுரம் வாய்க்கால் கொள்ளிடம் வழியாக சென்று இறுதியில் அனுமந்தபுரம் கிராம வழியாக சென்று கொள்ளிடம் ஆற்றில் கலந்து வருகிறது.

இந்த வாய்க்கால் கொள்ளிடம் மற்றும் அதைச் சார்ந்துள்ள பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்களுக்கு பாசன மற்றும் வடிகால் வசதி பெறுகிறது. கொள்ளிடம் பகுதியில் உள்ள அனைத்து நகர் பகுதிகளிலும் உள்ள குடியிருப்புகளை மழை நீர் சூழும் போதும், அப்பகுதியில் விளை நிலங்களில் மழைநீர் அதிகம் தேங்கும் போதும் எளிதில் வெளியேற்றி செல்லும் வாய்க்காலாகவும் இந்த வாய்க்கால் இருந்து வருகிறது.

பல இடங்களில் இந்த வாய்க்கால் தூர்ந்து போய் உள்ளது. இதனால் மழைநீர் அப்பகுதியில் உள்ள விளைநிலங்களில் நெற்பயிரில் தேங்கும் போது எளிதில் சென்று வெளியேறாமலும்,குடியிருப்புகளைசூழ்ந்து நீண்ட நாட்களாக வெளியேறாமலும் இருந்து வருகிறது. இந்த வாய்க்காலில் கழிவு நீர் குடியிருப்பு பகுதிகளில் இருந்தும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த கழிவு நீரில் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளும் கலந்து கிடப்பதால் சுற்றுப்புற சுகாதாரத்தை பெரிதும் பாதிக்கிறது.

கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாகவும் இருந்து வருகிறது. காலம் காலமாக விவசாயிகளின் நண்பனாக இருந்து வந்த இந்த வாய்க்கால் கடந்த வருடங்களில் அடைபட்டு கிடப்பதால் மழைக்காலங்களில் தண்ணீர் சென்று எளிதில் வெளியேற முடியாமலும் இருந்து வருவதால் பருவ மழை காலத்தில் விவசாயிகள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த குடியிருப்பு வாசிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

எனவே அனுமந்தபுரம் வாய்க்காலை தூர்வாரி ஆழ்படுத்தியும், குப்பைகளை அகற்றியும் தண்ணீர் எளிதில் சென்று வெளியேறும் வகையிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் குடியிருப்பு வாசிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: