காரியாபட்டி, டிச.23: காரியாபட்டி பேருந்து நிலையத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. காரியாபட்டியில் இருந்து பாப்பனம், நாங்கூர், வேப்பங்குளம், தொட்டியங்குளம் ஆகிய கிராமங்கள் வழியாக அ.முக்குளம் செல்லும் அரசு பேருந்தில் ஏராளமான பயணிகள் செல்வது வழக்கம்.இந்நிலையில் வழக்கமாக வரும் இந்த அரசு நகரப் பேருந்து நேற்று நீண்ட நேரம் ஆகியும் வரவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள் சுமார் 20க்கும் மேற்பட்டோர் காரியாபட்டி பேருந்து நிலையத்தின் வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பேருந்து நிலையத்திலிருந்து பிற பேருந்துகளை வெளியே செல்ல விடாமல் சிறை பிடித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. சிறிது நேரத்தில் முக்குளம் செல்லும் பேருந்து காரியாபட்டி பேருந்து நிலையத்துக்கு வந்ததால் பயணிகள் போராட்டத்தை கைவிட்டு பேருந்தில் ஏறி சென்றனர்.
