திருச்சுழி, டிச.23: நரிக்குடி அருகே நடுரோட்டில் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் 7 பள்ளி மாணவிகள் காயமடைந்தனர். நரிக்குடி அருகே அ.முக்குளத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் தற்போது அரையாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. இங்கு படிக்கும் அழகாபுரியை சேர்ந்த கனிஷ்கா, கனிப்பிரியா, தர்ஷினி உள்ளிட்ட 7 மாணவிகள் நேற்று தேர்வு எழுதிய பின்பு அ.முக்குளத்தை சேர்ந்த மாயக்கிருஷ்ணன் மகன் மணிமாறன்(23) என்பவரது ஆட்டோவில் வீட்டிற்கு புறப்பட்டனர்.
ஆட்டோ அழகாபுரி காலனி அருகே சென்றபோது திடீரென நடுரோட்டில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.இதில் ஆட்டோவில் பயணம் செய்த பள்ளி மாணவிகள் கனிஷ்கா, கனிப்பிரியா, தர்ஷினி, தனுஷ்கா ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்த நிலையில் 108 ஆம்புலன்ஸ் மூலமாக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். மற்ற மாணவிகள் மூவரும் லேசான காயத்துடன் அ.முக்குளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து அ.முக்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
