×

வருசநாடு அருகே காட்டுப்பன்றிகளால் பயிர்கள் நாசம்: வனத்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை

வருசநாடு, டிச. 23: தேனி மாவட்டம், வருசநாடு அருகே, ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மானாவாரி பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். குறிப்பாக முறுக்கோடை, உருட்டிமேடு, மேல்வாலிப்பாறை, காந்திகிராமம் அருகுவேலி, முத்தாலம்பாறை, கருப்பையாபுரம், வாய்க்கால்பாறை, ஆத்துக்காடு, பாம்பாடும்புதூர், ஆட்டுப்பாறை, உப்புத்துறை யானைக்கஜம் பகுதிகளில் தட்டைப்பயறு, மக்காச்சோளம், பப்பாளி அதிகளவில் பயிரிட்டுள்ளனர். தென்னந்தோப்புகளும் இப்பகுதியில் அதிகமாக உள்ளன. இந்நிலையில், வருசநாடு-கண்டமனூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட வனப்பகுதிகளில் திரியும் காட்டுப்பன்றிகள் இரவு நேரங்களில் கூட்டம், கூட்டமாக விளைநிலங்களுக்கு வருகின்றன. இவைகள் பயிர்களை தின்றும், சேதப்படுத்தியும் நாசம் செய்கின்றன.

தென்னந்தோப்புகளுக்குள் புகும் பன்றிகள் புதிய கன்றுகளை நாசம் செய்கின்றன. இதனால், விளைநிலங்களுக்கு பணிக்கு வரும் கூலித் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர். இரவு நேரங்களில் சில விவசாயிகள் பட்டாசு வெடித்து பன்றிகளை விரட்டுகின்றனர். எனவே, வனத்துறையினர் விளைநிலங்களுக்குள் வரும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘‘விளைநிலங்களில் காட்டுப்பன்றிகள் புகுந்து பயிர்களை நாசம் செய்கின்றன. இதனால், விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது. கரடி நடமாட்டமும் அதிகமாக உள்ளது. எனவே, வனத்துறை அதிகாரிகள் கரடி, காட்டுப்பன்றிகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும்’’ என்றனர்.

Tags : Varusanadu ,Forest Department ,Theni district ,Murukkodai ,Urudimedu ,Melvaliparai ,Gandhigramam Aruguveli ,Muthalamparai ,Karuppiyapuram ,Vaikkalparai ,Aathukadu ,Pampadumbudur ,Attuparai ,Upputthurai ,
× RELATED தாமிரபரணி அன்னைக்கு சிறப்பு வழிபாடு