- சிவகங்கை
- சிவகங்கை அரசு மகளிர் கலைக் கல்லூரி
- மாவட்ட நிர்வாகம்
- மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டல் மையம்
- தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்
- கலெக்டர்
- போர்கொடி…
சிவகங்கை, டிச.23: சிவகங்கை அரசு மகளிர் கலைக்கல்லூரியில், மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மாபெரும் தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. கலெக்டர் பொற்கொடி தலைமை வகித்தார்.
முகாமில் தேர்வு பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் பேசியதாவது:தமிழகத்தில் தரமான உயர்கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவைகளை இளைஞர்கள் பெற்றிட வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. கல்வி தகுதிக்கேற்றார் போல் வேலைவாய்ப்பு பெற்று பயன்பெறுகின்ற வகையில், மாநிலம் முழுவதும் பல்வேறு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதற்கு அடிப்படையாக புதிய தொழில்களை தமிழகத்தில் தொடங்குவதற்கென இந்திய அளவில் அதிக முதலீடுகளை ஈர்க்கின்ற மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது.
இன்று நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் மொத்தம் 102 தனியார் தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டு, தங்கள் நிறுவனங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்தனர். முகாமிற்கு மாவட்டம் முழுவதுமிருந்து மொத்தம் 1,837 வேலைநாடுநர்கள் கலந்து கொண்டனர். இதில், 13 மாற்றுத்திறனாளிகள் உட்பட 552 வேலைநாடுநர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் 59 பேர் இரண்டாம் கட்ட தேர்விற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு பேசினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் கவிதப்பிரியா, திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், மதுரை மண்டல இணை இயக்குநர் திருமலைச்செல்வி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் மணிகணேஷ், சுபாஷினி, சிவகங்கை அரசு மகளிர் கலைக்கல்லூரி முதல்வர் நளதம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
