மண்டபம், டிச.23: மண்டபம் பகுதியில் நான்கு வழிச்சாலை திட்டம் அறிவிக்கப்பட்ட பணிகள் துவங்கப்படாமல் இருப்பதால், அந்த பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய விரிவாக்க திட்டம் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமைந்துள்ள பேரூராட்சி கடற்கரை சிறுவர் பூங்கா விரிவாக்க திட்டம் உள்பட பல்வேறு பணிகள் பாதிப்படைந்து உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் முதல் ராமேஸ்வரம் வரை மண்டபம் வழியாக நான்கு வழிச்சாலை அமைப்பதற்கு தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நிலங்கள் அளவிட்டு உள்ளனர். இந்நிலையில் இந்த நான்கு வழிச்சாலை திட்டம் மண்டபம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வளாகத்தில் பாதி நிலங்களில் சாலை அமைக்கப்படவுள்ளது. அதுபோல மண்டபம் தோணித்துறை பகுதியில் தென்கடலில் அமைந்துள்ள மண்டபம் பேரூராட்சிக்கு சொந்தமான கடற்கரை சிறுவர் பூங்கா பகுதி வழியாக நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு பாம்பன் கடல் வழியாக பாலம் அமைத்து ராமேஸ்வரத்திற்கு சாலை செல்கிறது.
இதற்கு ராமநாதபுரம் முதல் ராமேஸ்வரம் வரை 60 கிலோ மீட்டர் தொலை தூரத்திற்கு நிலங்களை தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அளவீடு செய்து உள்ளனர். இந்நிலையில் இந்த நான்கு வழிச்சாலை திட்ட அறிவித்த பல வருடங்களாக ஆகிவிட்டது. இதனால் பணிகள் துவங்கப்படாமல் இருப்பதால் மண்டபம் பகுதியில் பொதுமக்கள் அடிப்படை வசதிக்கு தேவையான மருத்துவமனை விரிவாக்கத் திட்டம் மற்றும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமைந்துள்ள பூங்கா விரிவாக்க திட்ட பணிகள் முடங்கி கிடக்கிறது. ஆதலால் நான்கு வழிச்சாலை திட்டத்தை ஒன்றிய அரசு கீழ் இயங்கி வரும் தேசிய நெடுஞ்சாலைத் துறை நிர்வாகம் உடனடியாக பணிகளை துவங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மண்டபம் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
