×

முதுகுளத்தூர்,சாயல்குடி பகுதியில் தண்ணீரின்றி கருகி வரும் விவசாய பயிர்கள்: அதிகாரிகள் ஆய்வு செய்ய வலியுறுத்தல்

சாயல்குடி,டிச.23: முதுகுளத்தூர், சாயல்குடி, கடலாடி பகுதியில் மழையின்றி பயிர்கள் வாடி, கருகி வருவதால் கண்மாய் தண்ணீரை பம்ப்செட் குழாய்கள் மூலம் விவசாயிகள் பாய்த்து வருகின்றனர். முதுகுளத்தூர், சாயல்குடி, கடலாடி பகுதியில் மானாவாரி எனப்படும் மழையை மட்டுமே நம்பி விவசாயம் செய்யப்படுகிறது. கடலாடி, முதுகுளத்தூர் தாலுகா அளவில் சுமார் 90ஆயிரம் ஏக்கரில் நெல்லுக்கு அடுத்தபடியாக சுமார் 70 ஆயிரம் ஏக்கரில் மிளகாய் மற்றும் கம்பு, சோளம், குதிரைவாலி, மல்லி, நிலக்கடலை, வெங்காயம், எள் போன்ற பயிர்களும் பயிரிடப்பட்டுள்ளது.

பருவமழையை எதிர்பார்த்து செப்டம்பர் மாதம் உழவார பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் தொடர் மழையின்றி நெல் விதைகள் உள்ளிட்டவை முளைக்க வில்லை. தொடர்ந்து அக்டோபர் மாத கடைசியில் பிரதான வடகிழக்கு பருவமழை துவங்கியது. நவம்பர் மாதம் டிட்வா புயலால் தொடர் மழை பெய்தது. இதனால் இப்பகுதியில் 40 சதவீத கண்மாய், குளங்கள், பண்ணைக்குட்டைகள் போன்ற நீர்நிலைகள் நிறைந்தது. இதனால் நம்பிக்கையுடன் விவசாயிகள் இரண்டாவது முறையாக உழவார பணிகள் செய்தனர். தொடர் மழைக்கு வயற்காடுகளில் தண்ணீர் கிடந்ததால், பயிர்கள் நன்றாக வளர்ந்தது. இதனால் விவசாயிகள் களை எடுத்தல், உரமிடுதல் போன்ற பணிகளை ஆர்வத்துடன் செய்தனர். தற்போது மாவட்டத்தில் ஆங்காங்கே கடந்த சில நாட்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்து வருகிறது. ஆனால் முதுகுளத்தூர், கடலாடி பகுதியில் மேகமூட்டம், பனிப்பொழிவு மட்டுமே காணப்படுகிறது.

இதனால் கடலாடி, மீனங்குடி, பள்ளனேந்தல், சாத்தங்குடி, வெள்ளாங்குளம், பாப்பாகுளம், என்.பாடுவனேந்தல், ஆ.புனவாசல், ஏ.பாடுவனேந்தல், ஆப்பனூர், பொதிகுளம், ஒருவனேந்தல், ஏனாதி, கிடாத்திருக்கை, புரசங்குளம், மங்களம், ஓரிவயல், மாரந்தை, மேலச்சிறுபோது, பி.கீரந்தை, பன்னந்தை, சிக்கல், சிறைக்குளம், தனிச்சியம், மத்தியல், சேரந்தை, சாயல்குடி அருகே கீரந்தை, புல்லந்தை, எஸ்.எம்.இலந்தைகுளம், எம்.கரிசல்குளம், ஒச்சதேவன்கோட்டை,காணிக்கூர், திட்டங்குளம், கொக்காடி, குருவாடி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராம பகுதிகள் மற்றும் முதுகுளத்தூர் அருகே தேரிருவேலி, காக்கூர், பூக்குளம், இளஞ்செம்பூர், கண்டிலான், விளங்குளத்தூர், மேலக்கன்னிச்சேரி, கீழத்தூவல், மணலூர், ஆணைச்சேரி, கீழக்கொடுமலூர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் விவசாய நிலங்களில் போதிய தண்ணீரின்றி பயிர்கள் வாடி வருகிறது.

இதனால் விவசாயிகள் கண்மாய், பண்ணைக்குட்டைகளில் கிடக்கும் மழை தண்ணீரை பம்ப்செட் குழாய்கள் மூலம் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர். சாலையோரம் உள்ள விவசாய நிலங்களுக்கு இரவு நேரத்தில் குழாய் மூலம் சாலையின் வழியாக பாய்ச்சப்படுவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, இந்தாண்டு பருவமழை தாமதமாக துவங்கியதால் இரண்டு முறை உழவார பணிகள் செய்யப்பட்டது. களை எடுத்தல், உரம் இடுதல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் நடந்தது. இதனால் பயிர்கள் நன்றாக வளர்ந்து வந்தது. ஆனால் தொடர் மழையின்றி தற்போது பயிர்கள் கருகி வருகிறது. இதனால் கண்மாயில் கிடக்கும் தண்ணீரை பாய்ச்சி வருகிறோம்.

டீசல் மற்றும் பெட்ரோல் பம்ப்செட் மோட்டார்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.250 முதல் 300 வரை வாடகை கொடுக்கப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு ரூ.2ஆயிரம் வரை செலவு ஆகிறது. இந்தாண்டு உழவார பணிகள் முதல் தற்போது வரை இரட்டிப்பு செலவு ஏற்பட்டுள்ளது. அனைத்து விவசாய நிலங்களுக்கும் தண்ணீர் தேவை இருப்பதால், கண்மாய் தண்ணீர் வற்றி விடும் நிலை உள்ளது. எனவே பாதிக்கப்பட்டுள்ள பயிர்களை அதிகாரிகள் ஆய்வு செய்து இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Mudukulathur, Sayalgudi ,Sayalgudi ,Mudukulathur ,Kadaladi ,
× RELATED தாமிரபரணி அன்னைக்கு சிறப்பு வழிபாடு