×

இரண்டு மூதாட்டிகளிடம் 32 பவுன் நகை பறிப்பு

சிவகங்கை, டிச.23:இளையான்குடி அருகே அயன்குறிச்சியைச் சேர்ந்தவர் குப்புசாமி(75). இவர், உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 15ம் தேதி சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருடன் மனைவி சந்தானம்(70) உதவிக்காக உடன் இருந்துள்ளார். நேற்று மர்ம நபர் ஒருவர் டாக்டர் போல் நடித்து சந்தானத்திடம், குப்புசாமிக்கு உடனடியாக மருந்துகள் வாங்க வேண்டும் என கூறியுள்ளார். இதை நம்பிய சந்தானம், தனது கழுத்தில் அணிந்திருந்த ஒரு பவுன் மதிப்புள்ள தாலி செயினை கழற்றி அந்த நபரிடம் கொடுத்துள்ளார்.

பின்னர் ஏமாற்றப்பட்டதை அறிந்த சந்தானம், மருத்துவர்களிடம் தகவலை தெரிவித்தார். இது குறித்து சிவகங்கை நகர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவாடானை அருகே கீழ்குடி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவரது மனைவி தொண்டியம்மாள்(50). இவர் வெளியூர் சென்றிருந்தார். பின்னர் தனியார் ஆம்னி பேருந்து ஒன்றில் ஏறியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்திற்கு வந்தபோது, உடன் வந்த உறவினருடன் கீழே இறங்கியுள்ளார். அப்போது, பையினுள் இருந்த சிறிய நகை பெட்டியை மர்ம நபர்கள் திருடி சென்று உள்ளனர்.

நேற்று காலை திருவாடானை அருகே தினையத்தூர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய போது நகை பெட்டியுடன் 31 பவுன் தங்க நகைகள் மாயமாகி இருந்தது. இதனால் நிலைகுலைந்து போன தொண்டியம்மாள், உடனடியாக திருவாடானை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார், ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் அல்லது பேருந்து பயணத்தின் போது நகைகள் திருடப்பட்டதா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Sivaganga ,Kuppusamy ,Ayankurichi ,Ilayangudi ,Sivaganga Government Medical College Hospital ,Santhanam ,
× RELATED தாமிரபரணி அன்னைக்கு சிறப்பு வழிபாடு