×

மாடக்குளம், சிந்தாமணியில் புதிய காவல் நிலையங்கள் தொடக்கம்: போலீஸ் கமிஷனர் லோகநாதன் திறந்து வைத்தார்

மதுரை, டிச. 23: மதுரை மாநகரில் மாடக்குளம், சிந்தாமணியில் புதிய காவல் நிலையங்களின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் கலந்துகொண்டார். மதுரை மாநகரில் சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, அனைத்து மகளிர் என, 30 காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் எஸ்.எஸ்.காலனி ஸ்டேஷன் எல்லை பெரிதாக இருக்கிறது. போலீசார் ரோந்து செல்லவும், குற்றங்களை தடுக்கவும் அவதிப்படுகின்றனர் ஏற்கனவே தமிழக அரசின் விருது பெற்ற எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்தை பிரித்து புதிய காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதேபோல் கீரைத்துறை காவல் நிலையத்தின் கீழ் சிந்தாமணி, ரிங்ரோடு உள்ளிட்ட பகுதிகளை இணைத்து எல்லை விரிவடைந்த நிலையில் இருப்பதால், இந்த ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதிகளை பிரித்து புதிதாய் ஒரு காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது. இதுகுறித்து மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் தமிழக அரசுக்கு பரிந்துரைத்தார். அதன்படி மாடக்குளம், சிந்தாமணி என இரு புதிய காவல் நிலையங்கள் உருவாக்கப்படும் என, சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இதன் அடிப்படையில் எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்திற்கு உட்பட்ட அச்சம்பத்து, விராட்டிபத்து, ஹெச்எம்எஸ் காலனி, கோச்சடை, நடராஜ் நகர், பொன்மேனி உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கி மாடக்குளம் ஸ்டேஷன் புதியதாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் உதவி கமிஷனர் கணேசன், இன்ஸ்பெக்டர் கிரேஸ் சோபியாபாய் மற்றும் எஸ்ஐக்கள், போலீசார் என 40 பேர் பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இதன் தொடர்ச்சியாக மாடக்குளம் பெரியார்நகர் 2வது தெருவில் உள்ள அய்யனார் கோவில் அருகே, புதிய போலீஸ் நிலையம் நேற்று திறக்கப்பட்டது.

இதேபோல் அனுப்பானடி, மேல அனுப்பானடி, ஹவுசிங் போர்டு, சிந்தாமணி, தாய்நகர், கங்காநகர், ராஜம்மாள் நகர், வேலம்மாள் மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளை கொண்டு சிந்தாமணி காவல் நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு இன்ஸ்பெக்டராக பிரேமா சாந்தகுமாரி நியமிக்கப்பட்டுள்ளார். சிந்தாமணி கிராஸ் ரோடு ஓம்முருகா நகரில் இதற்கான புதிய காவல் நிலையம் நேற்று திறக்கப்பட்டது. இங்கு 2 எஸ்ஐக்கள் மற்றும் ஏட்டுக்கள், போலீசார் என, 40 பேர் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய காவல் நிலையங்களை மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் திறந்து வைத்து, பணிக்கான நடைமுறைகளை துவக்கி வைத்தார்.

Tags : Matakkulam, Sindamani ,Police Commissioner ,Lokanathan ,Madurai ,Madakkulam, Sindamani, Madurai Municipality ,Municipal Police Commissioner ,
× RELATED தாமிரபரணி அன்னைக்கு சிறப்பு வழிபாடு