10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது

ஊட்டி, ஜன. 20: நீலகிரி மாவட்டத்தில் 10 மாதங்களுக்கு பிறகு 10,12ம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு பள்ளிகள் நேற்று முதல் திறக்கப்பட்டுள்ளன. முதல் நாளில் 95 சதவீதம் பேர் பள்ளிக்கு வந்தனர். கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு அனைத்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. கடந்த 10 மாதங்களாக இவை மூடப்பட்டன. பொங்கலுக்கு பிறகு பொதுத்தேர்வு எழுதும் 10,12ம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு மட்டும் பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. பெரும்பாலான பெற்றோர் பள்ளிகள் திறக்க விருப்பம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து 19ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

இதனை தொடர்ந்து அனைத்து பள்ளிகளிலும் வகுப்பறைகள் கிருமி நாசினிகள் கொண்டு தூய்மைப்படுத்தப்பட்டது. கைப்பிடிகள், கதவுகள், ஜன்னல்கள் உள்ளிட்டவைகள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தூய்மைப்படுத்தப்பட்டது.

சில அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நிர்வாகங்களில் ஏற்பாட்டில் முன்னெச்சரிக்கையாக ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று முதல் பள்ளி திறக்கப்பட்ட நிலையில் 10,12ம் வகுப்பு மாணவ, மாணவியர்கள் ஆர்வமுடன் பள்ளிக்கு வருகை புரிந்தனர். பள்ளிக்கு வந்த மாணவர்கள் அனைவரிடமும் தெர்மல் ஸ்கேனர் கொண்டு வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டதுடன், முக கவசம் அணிந்திருப்பவர்களை மட்டுமே அனுமதித்தனர்.  நீலகிரி மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் மற்றும் சிபிஎஸ்இ., என 218 பள்ளிகளில் 10ம் வகுப்பில் 9 ஆயிரத்து 636, பேரும், 12ம் வகுப்பில் 8 ஆயிரத்து 398 பேரும் என மொத்தம் 18 ஆயிரத்து 034 மாணவ, மாணவியர்கள் உள்ளனர்.

முதல் நாளான நேற்று 95 சதவீதம் பேர் பள்ளிகளுக்கு வந்துள்ளனர் என பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நசரூதீன் கூறுகையில், 10,12 வகுப்பு மாணவர்களுக்கு இன்று (நேற்று) முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் நீலகிரி மாவட்டத்தை பொறுத்த வரை 5 சதவீதம் மாணவ, மாணவியர்கள் மட்டும் வரவில்லை. அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளும் பின்பற்றப்பட்டு வகுப்புகள் நடத்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. முதல் வாரத்தில் கொரோனா தடுப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்றுவது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது, என்றார்.

Related Stories:

>