திறந்த முதல் நாளிலேயே பள்ளிகளுக்கு 95 சதவீத மாணவர்கள் வருகை

சிவகங்கை, ஜன.20: சிவகங்கை மாவட்டத்தில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்2 மாணவ, மாணவிகள் 95 சதவீதம் பேர் பள்ளிகளுக்கு வந்தனர். கொரோனா பாதிப்பால் கடந்த மார்ச் இறுதி முதல் பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் புத்தகங்கள் வழங்கப்பட்டு கல்வி தொலைக்காட்சி மூலம் பாடங்களை கவனிக்க மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு சென்று ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்2 படிக்கும் மாணவ,மாணவிகள் நேற்று முதல் பள்ளிகளுக்கு வரலாம் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.

இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டன. இதையடுத்து நேற்று சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் 314ல் வழக்கம்போல் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்2 மாணவர்களுக்கு வகுப்புகள் நடந்தன.  இதில் படிக்கும் சுமார் 36ஆயிரம் மாணவர்களில் 95 சதவீதம் பேர் பள்ளிகளுக்கு வந்தனர். வெளியூர் சென்றுள்ளவர்கள், உடல் நிலை பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே பள்ளிக்கு வரவில்லை. நேற்று பாடங்கள் நடத்தப்படாமல் மாணவர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு கருத்துகள் குறித்து அறிவுறுத்தப்பட்டன. ஆசிரியர்கள் கூறியதாவது:பள்ளிகளுக்கு வருவதில் மாணவ, மாணவிகள் ஆர்வமாக உள்ளனர். பெற்றோர்களும் மாணவ,மாணவிகள் பள்ளிக்கு சென்று படிக்க வேண்டும் எனும் நிலையில் தான் உள்ளனர். அதனால் கிட்டத்தட்ட முழுமையான அளவு மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வருகை தந்துள்ளனர். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகளை நடத்துகிறோம். படிப்படியாக அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் வகுப்பு தொடங்க வேண்டும் என்றனர்.

Related Stories: