வாஷிங்டன்: அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்கின் சொத்து மதிப்பு உலகத்திலேயே இதுவரை எந்த செல்வந்தருக்கும் அடைந்திராத உச்சத்தை எட்டியுள்ளது. அதிகபட்ச ஒரு நாள் தனிநபர் வருமானத்திலும் புதிய சாதனை படைத்துள்ளார் எலான் மஸ்க். ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா, ஏ.ஐ தொழில் நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்க் உலக செல்வந்தர்களின் பட்டியலில் தொடர்ந்து முதல் இடம் வகித்து வருகிறார். இந்நிலையில் மஸ்கின் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் அடுத்த ஆண்டு ஐ.பி.யு எனப்படும் புது பங்கு வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. ஸ்பேஸ் எக்ஸ் பங்கு வெளியீடு மூலம் சுமார் ரூ.63 லட்சம் கோடிக்கு மேல் நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த தகவல்கள் நாளிதழ்களில் வெளியாவதை அடுத்து அதில் 42 விழுக்காடு பங்குகளை கொண்டுள்ள மஸ்கின் நிகர சொத்து மதிப்பு வரலாறு காணாத வகையில் 638 பில்லியன் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பீட்டில் சுமார் ரூ.58 லட்சம் கோடி அளவிற்கு பிரமாண்ட உச்சத்தினை அடைந்துள்ளது. 2020ம் ஆண்டு எலான் மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு 8.20 லட்சம் கோடியாக இருந்த நிலையில் 5 ஆண்டுகளில் அவரது நிகர சொத்துமதிப்பு ரூ.48 லட்சம் கோடியாக விஸ்வரூப வளர்ச்சியை அடைந்துள்ளது. உலகத்திலேயே இந்த அசாத்திய இலக்கை அடைந்த முதல் நபர் எலான் மஸ்க் குறிப்பிடத்தக்கது. இதே போல் அதிகபட்ச ஒரு நாள் தனிநபர் வருமானத்திலும் எலான் மஸ்க் ரூ.13 லட்சம் கோடியை ஈட்டி பிறர் எட்டமுடியாத உச்சத்தை அடைந்துள்ளார். மஸ்கின் ஒரு நாள் வருமான உயர்வு இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் நிகர சொத்து மதிப்பைவிட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
