சென்னை: ஆம்பூர், வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திமுக நிர்வாகிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சந்தித்து பேசினார். தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. சட்டப்பேரவை தேர்தலை எதிர்க்கொள்ள ஆளுங்கட்சியான திமுக முழுவீச்சில் களத்தில் இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் உள்ள திமுக நிர்வாகிகளை சந்திக்க திமுக தலைவர், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்தார். அதன்படி முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘உடன் பிறப்பே வா’ என்ற தலைப்பில் ‘ஒன் டூ ஒன்’ மூலம் தொகுதி வாரியாக நிர்வாகிகளை கடந்த ஜூன் 13ம் தேதி முதல் நேரில் சந்தித்து பேசி வருகிறார். இதுவரை அவர் 47 நாட்களில் 108 சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகளை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
இந்த நிலையில் திமுக தலைவர் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை ஆம்பூர், வாணியம்பாடி ஆகிய சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகளை தனித்தனியே சந்தித்து பேசினார். சந்திப்பின் போது சட்டசபை தேர்தலை எதிர்க்கொள்வதற்கான முன்னேற்பாடுகள், அறிவுரைகளை வழங்கினார். மேலும் கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும். அதற்காக இரவு, பகல் பாராமல் உழைக்க வேண்டும் என்று அப்போது அவர் அறிவுரை வழங்கினார். மேலும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பின்னர் தகுதியுள்ள வாக்காளர்கள் யாராவது நீக்கப்பட்டிருந்தால் அவர்களை மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும். தேர்தல் பணிகளை மேலும் முடுக்கி விட வேண்டும் என்று அப்போது வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
