கொடைக்கானலில் இன்று காலை அரசு பஸ்சை வழிமறித்த காட்டு யானை: பயணிகள் திக்… திக்…

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மிகவும் பிரசித்திபெற்ற சுற்றுலா தலமாகும். கொடைக்கானல் நகர் அருகே ஏராளமான மலைக்கிராமங்கள் உள்ளன. இங்கு அடர்ந்த வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் விவசாய நிலங்களில் முகாமிட்டு பயிர்களை நாசம் செய்வது வாடிக்கையாக உள்ளது. மலைச்சாலைகளில் காட்டு யானைகள் அவ்வப்போது கூட்டமாக உலா வருகின்றன. இந்நிலையில், கொடைக்கானல் கீழ்மலை கிராமத்தில் பிரதான மலைச்சாலையில் இன்று காலை அரசு பஸ் சென்றுகொண்டிருந்தது. பள்ளத்து கால்வாய் பகுதியில் சென்றபோது ஒற்றை காட்டு யானை அரசு பஸ்சை திடீரென வழிமறித்தது.

இதனால், பஸ்சில் இருந்த பயணிகள் பீதி அடைந்தனர். இதையடுத்து, டிரைவர் சுதாரித்து சிறிது தூரம் பஸ்சை பின்னோக்கி இயக்கினார். சாலையில் வழிமறித்து நின்ற யானை அதே இடத்தில் இருந்தபடி சிறிது நேரம் போக்கு காட்டியது. பின்னர், வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. இதனால், பஸ்சில் இருந்த பயணிகள் நிம்மதி அடைந்தனர். தொடர்ந்து டிரைவர் பஸ்சை இயக்கினார். பிரதான மலைச்சாலைகளில் உலா வரும் காட்டு யானைகள், காட்டெருமைகள் போன்ற வனவிலங்குகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: