ஜனவரியில் திருமணம் நடப்பதாக அறிவித்த நிலையில் காதலரை நடிகை நிவேதா பெத்துராஜ் பிரிந்தது ஏன்?:பரபரப்பு தகவல்கள்

சென்னை: துபாய் தொழிலதிபர் ஒருவரை காதல் திருமணம் செய்ய இருப்பதாக, கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் நடிகை நிவேதா பெத்துராஜ் அறிவித்தார். தங்களின் திருமணம் வரும் ஜனவரி மாதம் நடக்கும் என்று அவர் தெரிவித்திருந்த நிலையில், தற்போது திருமணம் திடீரென்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக நேற்று மாலை தகவல் பரவி, திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் வெளியான ‘ஒரு நாள் கூத்து’, ‘பொதுவாக எம்மனசு தங்கம்’, ‘டிக் டிக் டிக்’, ‘திமிரு புடிச்சவன்’, ‘சங்கத்தமிழன்’, ‘பொன் மாணிக்கவேல்’ ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்தவர், நிவேதா பெத்துராஜ் (34). தெலுங்கிலும் நடித்துள்ளார்.

பேட்மிண்டனில் மாநில அளவிலான போட்டிகளில் வென்றுள்ள அவர், ஃபார்முலா ஒன் கார் பந்தயத்திலும் பரிசு பெற்றுள்ளார். இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் நிவேதா பெத்துராஜ் தனது காதலனுடன் இருக்கும் போட்டோவையும், அதற்கு கீழே ஹார்ட் எமோஜிக்களையும் பதிவிட்டிருந்தார். அவரது காதலரின் பெயர் ரஜித் இப்ரான். மாடலிங் செய்த அவர், துபாய் மற்றும் சென்னையில் தொழிலதிபராக இருக்கிறார். ரஜித் இப்ரானுக்கும், நிவேதா பெத்துராஜுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, வரும் ஜனவரி மாதம் நடக்கும் என்று கூறப்பட்டது.

இதுகுறித்து கடந்த ஆகஸ்ட் மாதம் நிவேதா பெத்துராஜ் அளித்திருந்த பேட்டியில், ‘நானும், ரஜித் இப்ரானும் 5 வருடங்கள் நண்பர்களாக பழகினோம். பிறகு நாங்கள் காதலிப்பதை பெற்றோரிடம் சொன்னோம். அவர்கள் சம்மதித்தனர். கடந்த ஒன்றரை மாதத்துக்கு முன்பு எனக்கும், ரஜித் இப்ரானுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. வரும் ஜனவரி மாதம் சென்னையில் எங்கள் திருமணம் நடக்கிறது. தொடர்ந்து நான் சினிமாவில் நடிப்பேன்’ என்று சொல்லியிருந்தார். இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராமில் ரஜித் இப்ரானுடன் இருந்த போட்டோக்களை நிவேதா பெத்துராஜ் நீக்கியுள்ளார்.

ரஜித் இப்ரானும் நிவேதா பெத்துராஜுடன் இருந்த போட்டோக்களை நீக்கியுள்ளார். அவர்கள் இருவரும் இன்ஸ்டாகிராமில் ஒருவரை ஒருவர் ‘அன்ஃபாலோ’ செய்துள்ளனர். இதன்மூலம் அவர்கள் பிரிந்து விட்டதாகவும், திருமணம் நின்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து நிவேதா பெத்துராஜ் இதுவரை பதிலளிக்கவில்லை.

Related Stories: