உமீத் இணையதளத்தில் பதிவுக்கான கெடு முடிந்தது 5.17 லட்சம் வக்பு சொத்துகளில் 2.17 லட்சம் சொத்துகளுக்கு ஒப்புதல்: 10,869 பதிவுகள் நிராகரிப்பு

புதுடெல்லி: வக்பு சொத்துக்களை நிர்வகிப்பதற்காக, உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, ஒன்றிய சிறுபான்மை விவகார அமைச்சகம் கடந்த ஜூன் 6ம் தேதி உமீத் இணையதளத்தை தொடங்கியது. இதில், நாடு முழுவதும் உள்ள வக்பு சொத்துக்களை 6 மாதத்தில் பதிவு செய்ய வலியுறுத்தப்பட்டது. இதன்படி 6 மாத காலக்கெடு கடந்த 6ம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், 6 மாதத்தில் பதிவான வக்பு சொத்துகள் குறித்து ஒன்றிய சிறுபான்மையினர் விவகார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘6 மாத காலக்கெடுவில் மொத்தம் 5,17,040 வக்பு சொத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 2,16,905 சொத்துக்கள் நியமிக்கப்பட்ட ஒப்புதல் வழங்குநர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

2,13,941 சொத்துக்கள் பரிசீலனையில் உள்ளன. சரிபார்ப்பின் போது 10,869 சொத்துகள் இதுவரை நிராகரிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் நடந்த இந்த மிகப்பெரிய நடவடிக்கைக்காக பல மறுஆய்வுக் கூட்டங்கள், பயிற்சிப் பட்டறைகள், செயலாளர் மட்டத்திலான உயர் மட்ட கூட்டங்கள் நடத்தப்பட்டதன் மூலம் கடைசி நேரத்தில் பதிவு செய்வோர் எண்ணிக்கை அதிகரித்தது’’ என கூறப்பட்டுள்ளது. இணையதளத்தில் அதிகபட்சமாக உபியில் 92,830 சொத்துக்களும், மகாராஷ்டிராவில் 62,939 சொத்துக்களும், கர்நாடகாவில் 58,328 சொத்துக்களும், மேற்கு வங்கத்தில் 23,086 சொத்துக்களும் மற்றும் தமிழ்நாட்டில் 8252 சொத்துக்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Related Stories: