4500 உடைமைகளை ஒப்படைத்த இண்டிகோ: 1802 விமானங்கள் இயக்கம், 500 ரத்து

புதுடெல்லி: புதிய பணி நேர கட்டுப்பாட்டு விதிகள் அமல்படுத்தப்பட்டதன் காரணமாக கடந்த ஒரு வாரமாக உள்நாட்டு விமான நிறுவனமான இண்டிகோவின் விமான சேவைகள் முடங்கின. நாள்தோறும் நூற்றுக்கணக்கான விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் ஏராளமான பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பெரும் சிரமங்களுக்கு ஆளாகினார்கள். இந்நிலையில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட இண்டிகோ விமான சேவையை மீட்டெடுத்து வருகின்றது. கடந்த 3 நாட்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானங்களை இயக்கி வருகின்றது. எனினும் அனைத்து விமான சேவைகளையும் இண்டிகோவால் வழங்க முடியவில்லை.

10ம் தேதிக்குள் முழுமையாக விமான சேவை மீட்டமைக்கப்படும் என்று இண்டிகோ தெரிவித்துள்ளது. இந்நிலையில் நேற்று இண்டிகோ 1802 விமானங்களை இயக்கியது. மேலும் 500 விமானங்களை மட்டுமே ரத்து செய்து இருந்தது.
இதனிடையே இண்டிகோவிடம் இருந்த 9000 பைகளில் 4500 பைகளை விமான நிறுவனம் பயணிகளிடம் ஒப்படைத்துள்ளது. மீதமுள்ள உடைமைகள் அடுத்த 36 மணி நேரத்தில் வழங்கப்படும் என்று விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 138 இடங்களில் 137 இடங்களுக்கு 1802 விமானங்களை இண்டிகோ இயக்கியது.

* சிஇஓவிடம் நாளை விசாரணை
இண்டிகோவில் ஏற்பட்ட விமான இடையூறுகளை விசாரிப்பதற்கான சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தால் நியமிக்கப்பட்ட குழுவானது, நாளை இண்டிகோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பீட்டர் எல்பர்ஸ் மற்றும் தலைமை இயக்க அதிகாரி இசிட்ரோ போர்குராஸ் ஆகியோரை வரவழைத்து விசாரணை நடத்துவதற்கு வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விமான நிறுவனத்தின் விமான சேவைகளில் ஏற்பட்ட இடையூறுகள் குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக இருவரிடமும் குழு விசாரணை நடத்தக்கூடும் என்று கூறப்படுகின்றது.

* இண்டிகோவிற்கு எதிராக நடவடிக்கை
மாநிலங்களவையில் பேசிய விமானப்போக்குவரத்து துறை அமைச்சர் கே ராம்மோகன் நாயுடு, இண்டிகோ நிறுவனத்தின் பெருமளவிலான விமானங்கள் ரத்து குறித்து அரசு விசாரணையை தொடங்கியுள்ளது. மற்ற விமான நிறுவனங்களுக்கு முன்மாதிரியாக அமைவதற்கு இண்டிகோ நிறுவனத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். நிறுவனத்தின் அன்றாட நடவடிக்கைகளின் மூலமாக பணியாளர்கள் மற்றும் கடமைப்பட்டியலை நிர்வகிப்பதற்கு விமான நிறுவனம் தவறிவிட்டது. இந்த சூழ்நிலையை நாங்கள் எளிதாக எடுத்துக்கொள்ளவில்லை.” என்றார்.

* அரசு என்ன செய்கிறது?
காங்கிரஸ் மக்களவை தலைவர் கவுரவ் கோகாய்,‘ விமான நிலையங்களில் மக்கள் ஏன் பல நாட்களாக பிரச்னையை எதிர்கொள்கின்றனர். டயாலிசிஸ் நோயாளிகள், வீட்டில் திருமணங்களை வைத்திருப்பவர்கள், முதியவர்களை சந்திக்க விரும்புபவர்கள் விமான நிலையங்களில் பரிதவிப்பது ஏன்?இது குறித்து நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் ” என்றார்.

* ரூ.870 கோடி டிக்கெட் கட்டணம் ரிட்டர்ன்
நாடு முழுவதும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில், பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு ரூ.870 கோடி கட்டணம் திருப்பி ஒப்படைக்கப்பட்டது. பயணிகளின் பாதிப்பைக் கருத்தில் கொண்டு, இதுவரை பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த கட்டணம் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது.

* உச்ச நீதிமன்றம் தலையிட மறுப்பு
இண்டிகோ நிறுவனத்தின் விமானங்கள் ஆயிரக்கணக்கில் முன்னறிவிப்பு என்று ரத்து செய்யப்பட்டதால் கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் பெரும் பிரச்சனை ஏற்பட்டுள்ள நிலையில் இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் சில மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன இந்த மனுக்களை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த் அமர்வில் வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்தனர். அப்போது பேசிய தலைமை நீதிபதி தற்போது ஏற்பட்டிருக்கக்கூடிய பிரச்சனை மிகவும் தீவிரமானது லட்சக்கணக்கான மக்கள் விமான நிலையங்களில் தவித்து வருகிறார்கள் நிறைய மக்கள் உடல் நலம் சார்ந்த பிரச்சினைகளையும் சந்தித்து இருக்கிறார்கள் இவை அனைத்தையும் நாங்கள் அறிந்துள்ளோம்.

அதே நேரத்தில் இந்த விஷயத்தில் ஒன்றிய அரசாங்கமும் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனவே இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டியது இல்லை வழக்கமான விசாரணையாக இந்த மனு பட்டியலிடப்படும் என தலைமை நீதிபதி அறிவித்தார். இதேபோன்று டெல்லி உயர் நீதிமன்றத்திலும் சில மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது இந்த மனுக்கள் மீதான விசாரணை டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி கே உபாத்தியாயா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தற்போது ஏற்பட்டுள்ள விமான போக்குவரத்து சிக்கல் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விவகாரம் எனவே இந்த வழக்கை வரும் புதன் கிழமைக்கு விசாரணைக்காக பட்டியலிடுவதாக அறிவித்தார்.

* அரசு பொறுப்பேற்க வேண்டும் – மம்தா பானர்ஜி
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தா விமான நிலையத்தில்,‘‘விமானங்கள் கிடைக்காததால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். முழுமையான திட்டமிடல் இல்லாததால் இந்த நிலைமை ஏற்பட்டதாக நான் நம்புகிறேன். இது ஒரு பேரரழிவு. ஒன்றிய அரசு தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். அவர்கள் முன்பே மாற்று வழிகளை ஏற்பாடு செய்திருக்க வேண்டும். பயணிகள் இது தொடர்பாக நீதிமன்றத்துக்கு செல்லலாம் என நான் நினைக்கிறேன்” என்றார்.

Related Stories: