புதிய வேளாண் சட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் தடை மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து மக்கள் கிராம சபையில் தீர்மானம்

நாமக்கல், ஜன.13: நாமக்கல் மாவட்டம் மோகனூர் அடுத்த ஒருவந்தூரில் ஒன்றிய திமுக சார்பில், ‘அதிமுகவை நிராகரிப்போம்’ என்ற தலைப்பில் மக்கள் கிராமசபை கூட்டம், ஒன்றிய பொறுப்பாளர் நவலடி தலைமையில் நேற்று இரவு நடைபெற்றது. இதில் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஸ்குமார் கலந்துகொண்டு பேசினார். அவர்பேசும்போது, புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து, விவசாயிகள் டெல்லியில் 45 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த சட்டத்தை எதிர்த்து, திமுக டெல்லி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் வேளாண் சட்டங்களுக்கு தடைவிதித்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது.  இந்த சட்டத்தை ஆதரித்த மக்கள் விரோத அதிமுக ஆட்சிக்கு தமிழக மக்கள் இந்த தேர்தலில் முடிவு கட்ட வேண்டும் என்றார். தொடர்ந்து நடந்த கூட்டத்தில், புதிய வேளாண் சட்டங்களுக்கு நீதிமன்றம் சென்று தடை வாங்கிய திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜாகண்ணு, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் வரதராஜன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் செல்வி போஸ், கிளை செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதேபோல், கொல்லிமலை ஒன்றியம் பைல்நாடு ஊர்புரம் கிராமத்தில், திமுக சார்பில் மக்கள் கிராமசபை கூட்டம், ஒன்றிய பெறுப்பாளர் செந்தில் முருகன் தலைமையில் நடந்தது. மாவட்ட துணை செயலாளர் முன்னாள் எம்எல்ஏ பொன்னுசாமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார் கலந்துகொண்டு, திமுக கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றினார். இதில் ஒன்றிய செயலாளர் அசோக்குமார், முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் காளியப்பன், பாலசுந்தரம், வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் பொன் சந்திரசேகர், ஊராட்சி தலைவர் செளந்தர ஈஸ்வரன், ரெட்டிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: