சென்னை: இந்த தேர்தலில் துரோகம் வீழ்த்தப்பட வேண்டும் என்பதில் அமமுக உறுதியாக இருக்கிறது என டிடிவி.தினகரன் பேட்டி அளித்துள்ளார். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது, அமமுகவை ஜெயலலிதாவின் தொண்டர்கள் தான் இயக்குகிறார்கள். தேசிய ஜனநாயக கூட்டணியில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளராக இருக்கும் வரை அமமுக அந்த கூட்டணியில் இடம்பெற வாய்ப்பே இல்லை.
அம்மாவின் தொண்டர்கள் எங்கிருந்தாலும் ஓரணியில் திரள வேண்டும் என்பதுதான் அமமுகவின் நிலைப்பாடு. ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை நான் சந்திக்க மாட்டேன். அவரும் என்னை அழைக்கமாட்டார். இந்த தேர்தலில் துரோகம் வீழ்த்தப்பட வேண்டும் என்பதில் அமமுக உறுதியாக இருக்கிறது. தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதம் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
