பாதயாத்திரை சென்ற போது பரிதாபம் கலெக்டர் ஆபிஸ் முன் பாம்பு கடித்து பக்தர் பலி

நாமக்கல்,  ஜன.12: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே சாலப்பாளையம்  எம்ஜிஆர் நகரை சேர்ந்த 15 பேர், சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு நேற்று  முன்தினம் மாலை பாதயாத்திரையாக புறப்பட்டுச் சென்றனர். திருச்செங்கோட்டில்  இருந்து நடந்து வந்த இவர்கள், இரவில் நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்புறம்  உள்ள கேட்டின் அருகில் படுத்து தூங்கியுள்ளனர். அப்போது, கட்டுவிரியன் பாம்பு ஒன்று, நந்தகுமார்(28) என்பவரை  கடித்ததில், அலறி துடித்துள்ளார். இதனால், திடுக்கிட்டு எழுந்த பக்தர்கள், அந்த பாம்பை அடித்து கொன்றனர். இதையடுத்து , நந்தகுமாரை நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  பின்னர், மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துமவனைக்கு  கொண்டு செல்லும் வழியில் நந்தகுமார் உயிரிழந்தார். இதுகுறித்து  நல்லிபாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.  சக பக்தர் பாம்பு கடித்து உயரிழந்ததால், பாதயாத்திரை குழுவினர் தங்களது நடைபயணத்தை  ரத்து செய்து விட்டு ஊர் திரும்பினர். உயிரிழந்த நந்தகுமாருக்கு, வசந்தி என்ற  மனைவியும், 3 வயது பெண் குழந்தையும் உள்ளனர். பாதயாத்திரை சென்ற பக்தர்,  பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>