* வெ.இ. உடன் டெஸ்ட்: நியூசிலாந்து திணறல்
கிறைஸ்ட்சர்ச்: வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இந்த அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, கிறைஸ்ட் சர்ச் நகரில் நேற்று துவங்கியது. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி, நேற்றைய ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 231 ரன் எடுத்திருந்தது. அதிகபட்சமாக அந்த அணியின் கேன் வில்லியம்சன் 52, மைக்கேல் பிரேஸ்வெல் 47 ரன் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சாளர்களில் கேமர் ரோச், ஒஜே ஷீல்ட்ஸ், ஜஸ்டின் கிரீவ்ஸ் தலா 2, ஜெய்டன் சீல்ஸ், ஜோஹன் லேய்ன், ரோஸ்டன் சேஸ் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
* ஆஷஸ் தொடரில் கவாஜா ஆப்சென்ட்
பிரிஸ்பேன்: இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2வது ஆஷஸ் கிரிக்கெட் டெஸ்ட் தொடர் நாளை பிரிஸ்பேனில் துவங்குகிறது. இந்த போட்டியில் ஆஸி அணி துவக்க வீரர்களில் ஒருவரான உஸ்மான் கவாஜா ஆடமாட்டார் என தகவல்கள் கூறுகின்றன. முதுகு வலியால் அவர் அவதிப்படுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதேபோல், இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் மார்க் உட் காயமடைந்து இருப்பதால் அவருக்கு பதில் வில் ஜாக்ஸ், 3 ஆண்டு இடைவெளிக்கு பின் இங்கிலாந்து அணியில் இணைகிறார்.
* ஐபிஎல்லில் விலகிய கிளென் மேக்ஸ்வெல்
சிட்னி: வரும் 2026 ஐபிஎல் போட்டிகளுக்கான மினி ஏலம் வரும் 16ம் தேதி அபுதாபியில் நடக்கவுள்ளது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவை சேர்ந்த அதிரடி ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் (37), தன்னை ஏலம் எடுப்பதற்கான வாய்ப்பு குறைவு என்ற எண்ணத்தில், ஐபிஎல் ஏலத்தில் இருந்து விலகிக் கொண்டுள்ளார். கடந்த 2012 முதல் 2019ம் ஆண்டு வரை, தொடர்ந்து இடைவிடாமல் ஐபிஎல் போட்டிகளில் ஆடியுள்ள மேக்ஸ்வெல், சமீப காலமாக ஐபிஎல் அணிகளால் ஆர்வம் காட்டப்படாத வீரராக உள்ளார். 141 போட்டிகள் ஆடியுள்ள அவர், 2819 ரன்கள் குவித்துள்ளார். அவரது ஸ்டிரைக் ரேட் 155க்கும் அதிகம்.
