அகமதாபாத்: உலகக் கோப்பை டி20 இறுதிப் போட்டியில் நேற்று, நியூசிலாந்து அணிக்கு எதிராக ஆடிய இந்திய கிரிக்கெட் அணி 96 ரன் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றியை பதிவு செய்தது. இதன் மூலம் 3வது முறையாக உலகக் கோப்பை டி20 சாம்பியன் பட்டத்தை வென்று புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளது.
உலகக் கோப்பை டி20 இறுதிப் போட்டி அகமதாபாத்தில் நேற்று நடந்தது. அதில், 3வது முறையாக உலகக் கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ள இந்தியா – முதல் முறை கோப்பை கனவுடன் நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதையடுத்து இந்திய அணியின் துவக்க வீரர்களாக சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா களமிறங்கினர். இந்த போட்டியில் எப்படியும் வென்று கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற துடிப்புடன் இருந்த இந்திய வீரர்கள் துவக்கம் முதல், நியூசிலாந்து வீரர்களின் பந்துகளை விரட்டியடித்து ரன்களை குவிப்பில் தீவிரம் காட்டினர். அதனால் ரன்கள் மளமளவென குவியத் துவங்கின. முதல் 4 ஓவர்களில் இந்தியா அரை சதத்தை எட்டியது.
பவர்பிளேவான முதல் 6 ஓவர்களில் இந்திய அணியின் ஸ்கோர், விக்கெட் இழப்பின்றி 92 ரன்னாக உயர்ந்தது. முந்தைய போட்டிகளில் சரிவர ஆடாத அபிஷேக் சர்மா, சக வீரர் சஞ்சுவை முந்திக் கொண்டு ரன்வேகத்தை ஜெட் வேகத்துக்கு உயர்த்தினார். இருப்பினும், ரச்சின் ரவீந்திரா வீசிய 8வது ஒவரின் முதல் பந்தில் அபிஷேக் சர்மா (21 பந்து, 3 சிக்சர், 6 பவுண்டரி, 52 ரன்) ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 98. அதன் பின், சஞ்சு, இஷான் கிஷண் இணை சேர்ந்து மின்னல் வேகத்தில் ரன்களை உயர்த்தினர்.
இந்த இணையின் அட்டகாச ஆட்டத்தால், 69 பந்துகளில் இந்தியா 150 ரன்களையும், 90 பந்துகளில் 200 ரன்னையும் எட்டி தலை நிமிர்ந்தது. அதனால், பிரமாண்ட ஸ்கோரை இந்தியா நிச்சயம் அடிக்கும் என்ற நிலை காணப்பட்ட சமயத்தில், ஜேம்ஸ் நீஷம் வீசிய 16வது ஓவரின் முதல் பந்தில் சஞ்சு சாம்சன் (89 ரன்) ஆட்டமிழந்தார்.
அந்த ஓவரின் 5வது பந்தில், சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த இஷான் கிஷண் (25 பந்து, 4 சிக்சர், 4 பவுண்டரி, 54 ரன்) விக்கெட்டை பறிகொடுத்தார். அவரைத் தொடர்ந்து ஓவரின் கடைசி பந்தில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்து வெளியேறி அதிர்ச்சி தந்தார். ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகள் பறிபோன நிலையில், அடுத்து வந்த ஹர்திக் பாண்ட்யா 13 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
6வது விக்கெட்டுக்கு இணை சேர்ந்த திலக் வர்மா 6 பந்துகளில் 8, சிவம் தூபே, 8 பந்துகளில் 2 சிக்சர், 3 பவுண்டரிகளுடன் 26 ரன்களை ஆட்டமிழக்காமல் விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 20 ஓவர் முடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் விளாசியது. நியூசிலாந்து தரப்பில் ஜேம்ஸ் நீஷம் 3, ரச்சின் ரவீந்திரா, மேட் ஹென்றி தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
அதன் பின், 256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் நியூசிலாந்து அணியின் துவக்க வீரர்கள் டிம் செபெர்ட், ஃபின் ஆலன் களமிறங்கினர். அவர்களில் செபெர்ட் நம்பிக்கையுடன் பேட்டிங்கை தொடங்கியபோதும், ஃபின் ஆலன் தடுமாற்றத்துடன் ஆடினார். 7 பந்துகளை எதிர்கொண்ட அவர் ஒரு பவுண்டரியுடன் 9 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அக்சர் படேல் பந்தில் திலக் வர்மாவிடம் கேட்ச் தந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து அடுத்துவந்த ரச்சின் ரவீந்திரா (1 ரன்), ஜஸ்பிரித் பும்ரா வீசிய 4வது ஓவரின் முதல் பந்திலேயே விக்கெட்டை பறிகொடுத்தார்.
பின்னர் வந்த கிளென் பிலிப்சை அக்சர் படேல் 5 ரன்னில் வீழ்த்தினார். அவரைத் தொடர்ந்து மார்க் சாப்மேனை, 8வது ஒவரில் ஹர்திக் பாண்ட்யா கிளீன் போல்டாக்கினார். அதுவரை நங்கூரமாய் நிலைத்து நின்று 26 பந்துகளில் 52 ரன்கள் விளாசியிருந்த டிம் செபெர்ட், வருண் சக்ரவர்த்தி வீசிய 9வது ஓவரின் முதல் பந்தில் இரையானார். அதனால், வெறும் 72 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்து நியூசிலாந்து அணி பரிதாபமாக காட்சியளித்தது.
அதனால் 100 ரன்னுக்குள் நியூசியை சுருட்டி விடலாம் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருந்தனர். இருப்பினும், 6வது விக்கெட்டுக்கு இணை சேர்ந்த டேரில் மிட்செல், கேப்டன் மிட்செல் சான்ட்னர் சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்தனர். அவர்கள் 52 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், மிட்செல் 17 ரன்னில் வீழ்ந்தார். அதன் பின் வந்த ஜேம்ஸ் நீஷம், 16வது ஓவரில் பும்ரா பந்தில் 8 ரன்னுக்கு அவுட்டானார். பின் வந்த வீரர்கள் மேட் ஹென்றி பும்ராவிடம் ரன் எடுக்காமலும், மிட்செல் சான்ட்னர் மீண்டும் பும்ராவிடம் 43 ரன்னிலும் வீழ்ந்தனர்.
கடைசி விக்கெட்டாக, அபிஷேக் சர்மா வீசிய 19வது ஓவரின் கடைசி பந்தில் ஜேகப் டஃபி (3 ரன்) அவுட்டானார். 19 ஓவரில் 159 ரன்னுக்கு நியூசிலாந்து அணி சுருண்டது. அதனால், 96 ரன்னில் இந்திய அணி பிரம்மாண்ட வெற்றியை பதிவு செய்தது. இதன் மூலம் உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை இந்திய அணி கைப்பற்றி உள்ளது. இந்திய அணி தரப்பில் பும்ரா 4, அக்சர் படேல் 3, ஹர்திக் பாண்ட்யா, வருண் சக்ரவர்த்தி, அபிஷேக் சர்மா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். உலகக் கோப்பை டி20 வரலாற்றில் இந்திய அணி 3வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று புதிய சாதனையை அரங்கேற்றி உள்ளது.
ஆட்டநாயகன் விருது பும்ராவுக்கும், தொடர் நாயகன் விருது சஞ்சு சாம்சனுக்கு வழங்கப்பட்டது. இதுவரை நடந்த போட்டிகளில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தலா 2 முறையும், ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை அணிகள் தலா ஒரு முறையும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர்.
இந்திய அணி 3வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றதை நாடு முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகமாக பட்டாசு வெடித்து கொண்டாடினர். சென்னையில் மெரினா கடற்கரை முன் எல்இடி திரையில் கிரிக்கெட் போட்டியை கண்டு ரசித்த ரசிகர்களும் உற்சாகமாக துள்ளிக்குதித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி, ஐசிசி தலைவர் ஜெய் ஷா, தமிழக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திரையுலகம் உள்ளிட்ட பல்வேறு துறை பிரபலங்கள் வாழ்த்துக்கள் கூறி மகிழ்ந்தனர்.
* முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது: ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பையில் சிறப்பான வெற்றியை பெற்ற இந்திய அணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். கடந்த மூன்று போட்டிகளிலும் மிகுந்த ஆளுமையுடனும், நிதானத்துடனும் விளையாடி, தேவையான நேரத்தில் அதிரடி காட்டிய ‘சேட்டன்’ சஞ்சு சாம்சனின் ஆட்டத்தைக் காண்பது உற்சாகமாக இருந்தது.
இந்தத் தொடர் முழுவதும் தங்களின் இடைவிடாத சிறப்பான செயல்பாட்டின் மூலம் இந்தியாவை ஒரு மாபெரும் வெற்றிக்கு இட்டு சென்று, 3-வது முறையாக டி20 உலகக் கோப்பையை ஏந்தச் செய்த அனைத்து வீரர்களுக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
* பிரதமர் மோடி பாராட்டு
உலகக் கோப்பை டி20 சாம்பியன் பட்டம் வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி, எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி: சாம்பியன்ஸ்! ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை டி20 சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். மெச்சத்தக்க இந்த வெற்றி, நிகரற்ற திறன், மன உறுதி, அணியாக நிகழ்த்திய அர்ப்பணிப்பு ஆகியவற்றை பறைசாற்றுகிறது.
இப்போட்டிகள் முழுவதும் இந்திய அணியினர் உறுதியான போட்டி உணர்வை வெளிப்படுத்தினர். இந்த வெற்றி, ஒவ்வொரு இந்தியரின் இதயங்களில் பெருமையையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. சிறப்பாக வெற்றியை ஈட்டிய இந்திய அணிக்கு பாராட்டுகள். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
