வண்டலூர் சுற்று வட்டார பகுதிகளில் நீர்நிலைகள் மாயமானதால் மழைநீர் செல்வதில் சிக்கல்

கூடுவாஞ்சேரி, டிச.3: செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் வட்டத்தில் அடங்கிய காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வண்டலூர் ஊராட்சியில், வண்டலூர், ஓட்டேரி, ஓட்டேரி விரிவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இதில், ஊராட்சியில் உள்ள வண்டலூர் மலையானது சுமார் மூன்றரை கிமீ நீளமும், ஒன்றரை கிமீ அகலமும் இயற்கை தோற்றத்துடன் பசுமையாக இன்றுவரை காட்சியளித்து வருகிறது. இந்த மலையின் உச்சியில் சாட்லைட் கவர், தரை காடுகளில் அறிஞர் அண்ணா உயிரியியல் பூங்கா, கிழக்கு காட்டு பகுதியில் அய்யனாரப்பன் கோயில், அதன் அருகில் கோயில் குளம், வடமேற்கு பகுதியில் கோயில் மற்றும் குளம், மலையை சுற்றி நான்கு திசைகளிலும் நீர்வீழ்ச்சி அருவி என இயற்கை சூழல் நிறைந்துள்ளது.

இந்த, நீர்வீழ்ச்சி அருவி நீரூற்றாக தோன்றி, கால்வாய்கள், ஓடைகள் மூலமாக ஆறு மாத காலத்திற்கு அருகில் உள்ள வண்டலூர் சிற்றேரி, வண்டலூர் பெரிய ஏரிக்கரை, பெருங்களத்தூர் ஏரி, பழைய பெருங்களத்தூர் ஏரி, முடிச்சூர் ஏரி, நெடுங்குன்றம் ஏரி, சதானந்தபுரம் ஏரி போன்ற ஏரிகளுக்கு நீர் இருப்பு செய்ய ஆதாரமாகவும், இதனால், சுற்றியுள்ள சுமார் ஒரு லட்சம் மக்களின் வாழ்வாதாரத்திற்கு நீர் ஆதாராமாகம் உள்ளது. மேலும், மலையை சுற்றியுள்ள் 300 ஏக்கர் விவசாயிகளுக்கு விவசாயம் செய்ய இந்த ஏரிகள், ஓடைகள், கால்வாய்கள் உள்ளன. இந்நிலையில், வண்டலூர் ஊராட்சியில் நீர்நிலைகள் மாயமாகி விட்டதாகவும், இதுகுறித்து விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அதிகாரிகளிடம் பலமுறை புகார் கூறியும் கண்டு கொள்ளவில்லை என்றும், இதில் மாறிமாறி பழிபோடும் அதிகாரிகளால் மழைநீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

வண்டலூர் வருவாய்கால்வாய், வண்டலூர் மலையடிவாரத்தில் மலையின் உள்ளே உள்ள குளத்தில் நிரம்பி குற்றால அருவி போல 8 அடி உயரம், 10 அடி அகலத்தில் நீர்வீழ்ச்சி உருவாகிறது. இந்த இடம் சர்வே எண்.197 மற்றும் சர்வே எண்.199 நிலத்தில், தேசிய நெடுஞ்சாலை வழியாக சாலையின் குறுக்கே உள்ள பாலத்தை கடந்து, வண்டலூர் ரயில்வே பாலத்தை கடந்து, சிங்காரத்தோட்டம் என்ற பகுதியை கடக்கும்போது சிற்றேரி நிரம்பி விஏஓ அலுவலகத்தின் பின்புறமாக லட்சுமி நகர் குடியிருப்பு பகுதி வழியாக வண்டலூர் பெரிய ஏரிக்கு சென்றடைகிறது.

இந்த, ஏரி நீர் முடிச்சூர் ஏரிக்கும் சென்றடைந்து கடைசியில் அடையார் ஆற்றில் கலக்கிறது. இதில், புறம்போக்கு நிலத்தில் கால்வாய், நெடுஞ்சாலை காம்பவுன்ட் போடுவதாலும், இந்த இடங்களை ஆக்கிரமிப்பு செய்து மதில் சுவர் கட்டியதாலும், இந்த தண்ணீர் ஆரம்ப இடத்திலிருந்து திசை மாறி பெருங்களத்தூர் குடியிருப்பு பகுதிகளுக்குச் சென்று இந்த தண்ணீர் வீணாக அடையார் ஆற்றில் கலக்கிறது. அதேபோல், கால்வாய்களில் கடந்த 20 ஆண்டு காலமாக மண்ணடைப்பு ஏற்பட்டு கால்வாய் காணாமல்போன தோற்றம் அளிக்கிறது. மேலும், தேசிய நெடுஞ்சாலை அமைக்கும்போது இந்த கால்வாய் பெருங்களத்தூருக்கு செல்லும் பாலத்தின் வழியாக மாற்றப்பட்டுள்ளது.

மேலும், வண்டலூர் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே சுமார் 10 அடி அகலமும், 7 அடி ஆழமும் கொண்ட பாலம் உள்ளது. ஆனால், தற்போது இந்த பாலம் 40 ஆண்டு காலமாக தூர்வாராமல் மண் அடைப்பட்டு ஒரு அடி ஆழம்தான் உள்ளது. இதனால், மழை காலங்களில் இந்த பாலத்தின் வழியாக நீர் செல்ல முடியாமல் தேசிய நெடுஞ்சாலை வழியாக பெருங்களத்தூருக்கு வீணாக உபயோகமற்று செல்கிறது. அதன்பின் ரயில்வே பாலத்தை கடந்து சிங்காரத் தோட்டம் வழியாக சாலையை கடக்கும்போது, அங்குள்ள பாலம் முழுமையாக அடைப்பட்டு விட்டதால் சாலை வழியாக வரும் தண்ணீரும், மூகாம்பிகை கோயில் வழியாக பெருங்களத்தூருக்கு வீணாக செல்கிறது.

அதன் பின்பு சிங்காரத்தோட்டம் ரயில்வே பாதை அருகிலிருந்து சிற்றேரி வரும் மழைநீர் பெரிய கால்வாயை இப்பகுதி மக்கள் முழுமைகயாக ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் தற்போது 2 அடி அகலம்தான் உள்ளது. மேலும், சிற்றேரிலிருந்து வரும் மழைநீர் வழித்தடமும், விஏஓ அலுவலகம் பின்புறத்திலிருந்து லட்சுமி நகர் செல்லும் நீர் வழித்தடமும் 3 அடி அகலமே உள்ளது. இந்த, வழித்தடத்தில் உள்ள மற்ற பாலங்களும் முழுமையாக அடைப்பட்டு உள்ளது. இதனால், முழுமையாக பெரிய ஏரிக்கு செல்ல முடியாமல் மழைநீர் மாற்று பாதையில் சென்று வீணாகிறது.

மேலும், வண்டலூர் கிராமத்தின் நடுவில் அமைந்துள்ள இந்த ஏரியின் பாசனத்தில் ஒரு சில விவசாயிகள் இன்று வரையிலும் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த ஏரியை சுற்றி கிராமங்களும், புதிய நகர்களும் அமைந்தள்ளதால் குடியிருப்புவாசிகளுக்கு கிணற்றிலிருந்து நீர் எடுப்பதற்கு, இந்த சிற்றேரி நீர் ஆதாரமாக உள்ளது. இதேபோல், வண்டலூர் பகுதியில் உள்ள பெரிய ஏரி மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இது இன்று வரை 100 ஏக்கருக்கு மேல் விவசாயம் செய்ய நீர் வழங்கும் ஏரியாக உள்ளது. மேலும், வண்டலூர் உயிரியியல் பூங்காவிற்கு இந்த ஏரியில் இருந்துதான் தண்ணீர் எடுத்து செல்லப்படுகிறது.

வண்டலூர் கிராமத்திற்கு பாலாற்று குடிநீர் குழாய் கிடையாது. இதில், வண்டலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கும், வண்டலூர் பெரிய ஏரியின் நீர், மக்களின் பயன்பாட்டிற்கு ஆதாரமாக உள்ளது. மேலும், இந்த ஏரிக்கு வருவாய் கால்வாய் மூலம் வரும் மழைநீர் திசைமாறி சென்றால் கோடை காலங்களில் பெரும் வறட்சியை சந்திக்க நேரிடும். எனவே, இந்த வருவாய் கால்வாயை தூர்வாரி பாதுகாக்க வேண்டும். மேலும் மேற்கண்ட காரணங்களால் மலையடி வாரத்தில் உள்ள சர்வே எண்.197ல் உள்ள மதில் சுவரை உடைத்து சர்வே எண்:199-ல் உள்ள கால்வாய்களை பழைய கிராம வரைபடத்தில் உள்ள கால்வாய்களின்படி தூர் வாரப்பட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் ரோடு கால்வாய் வழியாக சர்வே எண்:199/8A3 நம்பரின்படி எதிரே உள்ள பாலத்தை தூர்வாரி தண்ணீர் கொண்டு வர வேண்டும்.

மேலும், ரயில்வே பாலத்தை கடந்து சிங்காரத்தோட்டத்தின் வழியாக செல்லும் கால்வாய் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி 8 அகலம் 5 அடி ஆழம் தோண்டப்பபட்டு சிற்றேரிக்கு நீர் வரத்து வரும்படி ஏற்பாடு செய்ய வேண்டும். வண்டலூர் பெரிய ஏரியின் பழைய நீர் கொள்ளளவின்படி 2 அடி உயர்த்தி கட்டித்தந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஓடைகளையும், கால்வாய்களையும் பாதுகாத்து விவசாயிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

நிரந்தர தீர்வுக்கு தடுப்பணை
செங்கல்பட்டு மாவட்டத்தில் 3,600 ஏரிகளுக்கு மேல் உள்ளது. இதனை, தூர்வாருவதற்கு பணம் இல்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும், நீர் சேமிப்பு கிடங்கிற்கு அதிகாரிகள் முக்கியத்துவம் கொடுப்பதே கிடையாது. இதில், நிலத்தடி நீரில் இருந்து போர் மூலம் வரும் தண்ணீர் மருந்துக்கு சமமாகும். இந்த, தண்ணீர் மூலம் விவசாயம் செய்து சாப்பிட்டால் மனித உடலுக்கு கேடு விளைவிக்கும். இதில், இயற்கையாக வரும் மழை நீரை ஏரி, குளம், குட்டையில் தேக்கி வைத்து, அதனை விவசாயத்துக்கு பயன்படுத்தினால், அந்த விவசாயம் மூலம் வரும் இயற்கையான உணவு பொருட்கள் மனிதனுக்கு சத்தாக விளங்கும்.

இதில், ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள நீர்நிலைகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சரியான முறையில் அளவீடு செய்து தூர்வாரி பாதுகாத்தாலே போதும். இதுகுறித்து நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளால் மழைநீர் கால்வாய்கள் தற்போது கழிவுநீர் கால்வாயாக மாறிவிட்டது. மேலும், 50 ஏக்கரில் தண்ணீர் நிற்க வேண்டிய நிலை மாறி, தற்போது 25 ஏக்கரில் தண்ணீர் நிற்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. மேலும், இதில் வீராணம் நீர் மற்றும் பாலாற்று நீரை நம்பி நாங்கள் இல்லை. எனவே இனிவரும் காலங்களிலாவது இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு ஆங்காங்கே தடுப்பணை கட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: