கோவை: ‘‘எடப்பாடி பழனிசாமி பெரிய தலைவர் அல்ல, அவருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை’’ என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தவெக உயர்மட்ட மாநில குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் சென்னை செல்வதற்காக நேற்று மாலை கோவை விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது அவர் மீது எடப்பாடி பழனிசாமி கூறிய குற்றச்சாட்டுகள் தொடர்பான நிருபர்களின் கேள்விகளுக்கு, ‘‘அவர் (எடப்பாடி பழனிசாமி) பெரிய தலைவர் அல்ல, அவருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை’’ என பதிலளித்தார்.
செங்கோட்டையன் கட்சி மாறவில்லை, கிளை மட்டுமே மாறியுள்ளார் என்று உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் குறித்த கேள்விக்கு, ‘‘யார் வேண்டுமானாலும், எது வேண்டுமானாலும் சொல்லட்டும். என்னை பொறுத்த அளவிற்கு தெளிவாக இருக்கிறேன்’’ என பதிலளித்தார்.கோபிச்செட்டிபாளையத்தில் வெற்றிவிழா நடத்துவோம் என எடப்பாடி பழனிசாமி பேசியிருப்பது குறித்த கேள்விக்கு, ‘‘தேர்தலில் மக்கள் தீர்ப்பளிப்பார்கள், பாருங்கள்’’ எனக்கூறியபடி சென்றார்.
