நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் படிவங்களை திரும்ப அளிக்காத 44 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கமா?

*11 வாகனங்களில் விழிப்புணர்வு பிரசார பயணம் தொடக்கம்

நாகர்கோவில் : நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் 44 ஆயிரம் விண்ணப்ப படிவங்கள் திரும்ப வராமல் உள்ளதால், இது தொடர்பாக விழிப்புணர்வு பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த விண்ணப்ப படிவங்கள் திரும்ப வருவதில், நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் பெரும் பின்னடைவு உள்ளது.
நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 2,71,185 வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவம் வழங்கப்பட்டுள்ளது.

இதில் தற்போது வரை 2,26,000 வாக்காளர்கள் தங்களது படிவங்களை திரும்ப வழங்கியுள்ளார்கள். சுமார் 44,000 வாக்காளர்கள் தங்களது படிவங்களை இன்னும் வழங்கமால் உள்ளார்கள். இவர்களிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை நாளை (30ம் தேதி) திரும்ப வழங்குவதற்கு கடைசி நாள் ஆகும்.எனவே 44,000 வாக்காளர்களும் தங்களுக்கு வழங்கப்பட்ட படிவங்களை பூர்த்தி செய்து, வாக்குப்பதிவு அலுவலர் மற்றும் நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் ஆகியோரிடம் வழங்கிடுமாறு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் அழகு மீனா கேட்டுக் கொண்டு உள்ளார்.

பூர்த்தி செய்யாத வாக்காளர்கள் வாக்காளரின் பெயர் வரைவு வாக்காளர் பட்டியல் 2026-லிருந்து தானாகவே நீங்கிவிடும் என்றும் கூறி உள்ளார். நாகர்கோவில் சட்டமன்றத்துக்குட்பட்ட அனைத்து வாக்காளர்களும் தங்கள் கணக்கீட்டு படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் திரும்ப வழங்குவதற்கு வலியுறுத்தி 18 விழிப்புணர்வு பிரசார வாகனங்கள் மூலம் நேற்று முதல் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. இந்த பிரசார வாகன பயணத்தை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கலெக்டர் அழகு மீனா, கொடியசைத்து துவக்கி வைத்தார்.

நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்காளர்கள் இந்த இறுதி வாய்ப்பினை பயன்படுத்தி, தங்கள் கணக்கீட்டு படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் திரும்ப வழங்க வேண்டும் என அவர் கூறினார். நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, உதவி ஆட்சியர் (பயிற்சி) ராகுல் குமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுகிதா, நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர் கோட்டாட்சியர் காளீஸ்வரி, உசூர் மேலாளர் சுப்பிரமணியம், தேர்தல் தனி வட்டாட்சியர் வினோத், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் கந்தசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: