டிட்வா புயல் காரணமாக அதி கனமழை எச்சரிக்கை 14 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஆலோசனை: அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட உத்தரவு

சென்னை: டிட்வா புயல் காரணமாக அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து 14 மாவட்ட கலெக்டர்களுடன் காணொலிக்காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் தற்சமயம் இலங்கையின் மேல் நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையிலே நகர்ந்து தமிழ்நாட்டின் கடலோரமாக வடக்கு நோக்கி நகரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் கடுமையான மழைபொழிவு ஏற்படக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனவே, மாநில பேரிடர் மீட்பு படையின் 16 அணிகளும், தேசிய பேரிடர் மீட்பு படையின் 12 அணிகளும் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை, எழிலகத்தில் உள்ள மாநில அவசர கால செயல்பாட்டு மையத்திற்கு வந்து 14 மாவட்ட கலெக்டர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக டிட்வா புயல் காரணமாக எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, அனைத்து துறையினரும் முறையான ஒருங்கிணைப்புடன் செயல்பட வேண்டும் என்றும், அனைத்து துறை அலுவலர்களும் தயார் நிலையில் இருக்கவும், மக்கள் பாதிக்கப்படாத வகையில் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கவும் அறிவுறுத்தினார். அத்துடன், முகாம்களில் மக்களுக்கு தேவையான பால் உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனறும், குடியிருப்பு பகுதியில் வெள்ளநீரை அகற்றிட தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும், புயல் காற்றினால் மின்கம்பங்கள் பாதிக்கப்பட்டால், அதனை சீர்செய்திட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது தலைமை செயலாளர் முருகானந்தம், வருவாய் நிர்வாக ஆணையர் சாய்குமார், எரிசக்தி துறை செயலாளர் மங்கத்ராம் சர்மா, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் அமுதா, நில நிர்வாக ஆணையர் பழனிசாமி, பேரிடர் மேலாண்மை ஆணையர் சிஜி தாமஸ் வைத்தியன், பேரிடர் மேலாண்மை இயக்குநர் முத்துக்குமரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories: