மனைவியுடன் கள்ளத்தொடர்பை கைவிட மறுத்ததால் கொன்றேன்

கிருஷ்ணகிரி, ஜன.11: கிருஷ்ணகிரி அருகே, தலையில் கல்லை போட்டு எலக்ட்ரீசியன் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொழிலாளி கைது செய்யப்பட்டார். அவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். கிருஷ்ணகிரி அருகே கொண்டேப்பள்ளியை சேர்ந்தவர் திருப்பதி(44), எலக்ட்ரீசியன். நேற்று முன்தினம், வீட்டில் இருந்து தனது டூவீலரில் வெளியே சென்றவர், மாலையில் பாஞ்சாலியூர் அருகே செங்கல் சூளையில் உள்ள மரத்தின் கீழ், தலையில் கல்லை போட்ட நிலையில் கொலையுண்டு கிடந்தார். தகவலின் பேரில், சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தியதில், கொலையான திருப்பதிக்கு, பூசாரிப்பட்டியை சேர்ந்த கூலி தொழிலாளி திருப்பதி(37) என்பவரது மனைவியுடன் கள்ளத்தொடர்பு இருந்ததும், கள்ளக்காதல் விவகாரத்தில் அவர் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.

இதனிடையே, திருப்பதியை கொலை செய்த கூலித்தொழிலாளி  திருப்பதியை போலீசார் நேற்று கைது செய்தனர். போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில், `எனது மனைவிக்கும், திருப்பதிக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. இருவரையும் கண்டித்து எச்சரிக்கை விடுத்தும், அவர்கள் கள்ளத்தொடர்பை கைவிடவில்லை. இதையடுத்து நான், திருப்பதியை நைசாக பேசி பாஞ்சாலியூர் செங்கல் சூளை அருகே வரவழைத்தேன். அங்கு வந்த அவரிடம், எனக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அவர்களின் எதிர்காலம் வீணாகி விடும் எனக்கூறி கள்ளத்தொடர்பை கைவிடுமாறு கூறினேன். ஆனால், அவர் அதை ஏற்க மறுத்ததால், ஆத்திரமடைந்து கல்லால் தாக்கி கொலை செய்தேன்,’ என கூறியுள்ளார். இதனையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க, போலீசார்  நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Related Stories: