மதுரை: மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ஜூனியர் உலகக்கோப்பை ஆடவர் ஹாக்கி போட்டி இன்று காலை கோலாகலமாக துவங்கியது. இன்று 4 போட்டிகள் நடைபெறுகின்றன. 14வது உலகக்கோப்பை ஜூனியர் ஆடவர் ஹாக்கி போடி சென்னை மற்றும் மதுரையில் இன்று காலை கோலாகலத்துடன் தொடங்கியது. சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதை தொடர்ந்து மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ஹாக்கி போட்டியை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். ஜெர்மனி-தென் ஆப்பிரிக்கா மோதல்: இன்று துவங்கிய ஹாக்கித் தொடரில் 24 நாடுகளை சேர்ந்த அணிகள் பங்கேற்கின்றன.
மதுரையில் நடக்கும் போட்டிகளில் ‘ஏ’ பிரிவில் ஜெர்மனி, கனடா, தென் ஆப்ரிக்கா, அயர்லாந்து ஆகிய அணிகளும், ‘டி’ பிரிவில் ஸ்பெயின், எகிப்து, பெல்ஜியம், நமீபியா அணிகளும், ‘இ’ பிரிவில் நெதர்லாந்து, மலேசியா, இங்கிலாந்து, ஆஸ்திரியா ஆகிய அணிகளும் மோதுகின்றன. இந்த அணியினர் மதுரைக்கு வந்தது முதல் நேற்று வரை தொடர் பயிற்சியில் ஈடுபட்டனர். இன்று காலை 9 மணிக்கு முதல் ஆட்டத்தில் ஜெர்மனி, தென்ஆப்ரிக்கா அணிகள் மோதின. தொடர்ந்து 11.15 மணிக்கு கனடா-அயர்லாந்து அணியும், பகல் 1.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் ஸ்பெயின் அணி-எகிப்தையும், மாலை 3.45 மணிக்கு பெல்ஜியம்-நமீபியாவுடனும் மோதுகின்றன.
சர்வதேசப் போட்டி என்பதால் ரேஸ்கோர்ஸ் மைதானம் முழுவதும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. போட்டியை காண்பதற்காக இணையதளங்களில் 1,200 பேர் புக்கிங் செய்தவர்கள் மற்றும் 1000 பேர் பொதுமக்கள் ஆகியோரை போலீசார் சோதனை செய்து உள்ளே அனுப்பினர். மதுரையில் சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் கண்டு பொதுமக்கள், ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
முதல் போட்டியில் ஜெர்மனி வெற்றி
ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி இன்று தொடங்கியது. மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் ஏ பிரிவில் ஜெர்மனி-தென்ஆப்ரிக்கா அணிகள் மோதின. விறுவிறுப்புடன் நடந்த இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஜெர்மனி ஆதிக்கம் செலுத்தியது. இதில் 19,43,44, 56வது நிமிடங்கள் அந்த அணி கோல் அடித்தது. தென்ஆப்ரிக்காவால் கடைசிவரை கோல் அடிக்க முடியவில்லை. இதனால் 4-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி வென்றது.
