அமெரிக்காவில் பரபரப்பு; வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கி சூடு: ஆப்கான் நாட்டை சேர்ந்தவர் கைது

வாஷிங்டன்: அமெரிக்காவில் வெள்ளை மாளிகை அருகே ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் நடத்திய துப்பாக்கிசூட்டில் 2 பாதுகாவலர்கள் படுகாயமடைந்தனர். இது தீவிரவாத செயலா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. அமெரிக்காவின் வெள்ளை மாளிகை எப்போதுமே உச்சபட்ச பாதுகாப்பு நிறைந்த பகுதியாக இருந்து வருகிறது. பரபரப்பாக காணப்படும் இந்த வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபரின் ஓவல் அலுவலகம் மற்றும் அதிகாரப்பூர்வ இல்லம் இருப்பதால் 24 மணி நேரமும் தேசிய பாதுகாப்பு படைப்பிரிவை சேர்ந்த வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நேற்று இரவு வெள்ளை மாளிகை வடமேற்கு பகுதியில் திடீரென நுழைந்த ஒரு மர்ம நபர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாவலர் ஒருவரின் துப்பாக்கியை பிடுங்கி சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் தேசிய பாதுகாப்பு படை பிரிவை சேர்ந்த 2 பாதுகாவலர்கள் படுகாயமடைந்தனர். உடனடியாக மற்ற பாதுகாவலர்கள் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தி பதிலடி கொடுத்தனர். இதில் அந்த நபரும் படுகாயமடைந்தார். உடனடியாக அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் படுகாயமடைந்த பாதுகாவலர்களும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விசாரணையில், துப்பாக்கி சூடு நடத்தியவர் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த ரஹ்மானுல்லா லகன்வால் (29) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். எதற்காக அவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார், அவரது நோக்கம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் 2021ம் ஆண்டு சட்டப்பூர்வமாக அமெரிக்காவிற்குள் நுழைந்தவர் என்றும், அவரது சட்டப்பூர்வ அந்தஸ்து கடந்த மாதமே காலாவதியாகி விட்டது எனவும் தெரியவந்துள்ளது. தாக்குதலுக்கான நோக்கம் குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. இருப்பினும் வெள்ளை மாளிகை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 2200 தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் நடைபெறும்போது அமெரிக்க அதிபர் டிரம்ப், துணை அதிபர் ஜேடி வான்ஸ் ஆகியோர் வெள்ளை மாளிகையில் இல்லை. டிரம்ப் புளோரிடாவில் உள்ள தனது ரிசார்ட்டிலும், ஜேடி வான்ஸ் கெண்டக்கி மாகாணத்திலும் இருந்தனர். பயங்கரவாத நோக்கத்துடன் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள்.

டிரம்ப் எச்சரிக்கை
அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில்,’ பைடன் நிர்வாகத்தின் கீழ் நுழைந்த அனைத்து ஆப்கானிய அகதிகளையும் மறுவிசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளேன் . அவர்கள் நம் நாட்டை நேசிக்க முடியாவிட்டால், நாங்கள் அவர்களை விரும்பவில்லை. துப்பாக்கிச் சூடு நமது முழு நாட்டிற்கும் எதிரான குற்றம்’ என்றார்.

Related Stories: