ஹாங்காங் தீ விபத்தில் பலி எண்ணிக்கை 83ஆக அதிகரிப்பு: 279 பேர் மாயம், 3 பேர் கைது

ஹாங்காங்: ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 83ஆக அதிகரித்துள்ளது. 300 பேர் மாயமானதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஹாங்காங்கின் தை போ மாகாணத்தில் ‘வாங் புக் கோர்ட்’ என்ற அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் தலா 35 மாடிகளுடன் வரிசையாக 8 கட்டிடங்கள் உள்ளன. மொத்தமுள்ள 2,000 வீடுகளில் 4,800 பேர் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்பு வளாகத்தில் புதுப்பிக்கும் பணிகளுக்காக கட்டப்பட்டு இருந்த மூங்கில் சாரங்களில் நேற்று முன்தினம் பிற்பகல் திடீரென தீப்பற்றியது. அந்த நேரத்தில் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ அடுத்தடுத்த கட்டிடங்களுக்கும் மளமளவென பரவியது. இதனால் 7 கட்டிடங்களில் தீ மளமளவென பரவியது. அந்த பகுதியே புகைமண்டலமானது. வீடுகளில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியே ஓடினர். சிலர் மூச்சு திணறி வெளியே ஓட முடியாமல் மயங்கினர்.

தகவலறிந்து விரைந்த 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் அங்கு விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடினார்கள். பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில், தீயணைப்பு வீரர் உட்பட 13 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் பலி எண்ணிக்கை 83 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 279பேர் காணாமல் போயுள்ளனர். பலர் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக புதுப்பிக்கும் பணிகளை மேற்கொண்ட கட்டுமான நிறுவனத்தை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த விபத்து காரணமாக குடியிருப்புக்களில் இருந்து வெளியேற்றப்பட்ட சுமார் 900 பேர் அருகிலுள்ள சமுதாயக் கூடங்களிலும், தற்காலிக தங்குமிடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோரின் நிலை என்ன என்பது தெரியவில்லை என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

Related Stories: