புதுக்கோட்டை, நவ.28: புதுக்கோட்டையில் வனத்துறையின் மூலம் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
புதுக்கோட்டை வனத்துறை மூலம் காலநிலை மாற்றத்திற்கான தமிழ்நாடு உயிர்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கல் திட்டத்தின் மூலம் மாநகராட்சி மற்றும் அதன் அருகாமையில் உள்ள பகுதிகளில் காற்று மாசினை குறைக்கவும், பசுமை பரப்பினை அதிகரிக்கவும் புதுக்கோட்டை தனியார் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
விழாவில் மாவட்ட வன அலுவலர் கணேசலிங்கம் தலைமை தாங்கினார், குழந்தைகள் நல நிபுணர் டாக்டர் ராமதாஸ் முன்னிலை வகித்தார். மருத்துவ கல்லூரி கண்காணிப்பாளர் டாக்டர் தையல் நாயகி, டாக்டர் ராமநாதன், டாக்டர் முத்தையா, புதுக்கோட்டை மரம் நண்பர்கள் விஸ்வநாதன், பழனியப்பா மெஸ் கண்ணன், விதைகலாம் அமைப்பினை சார்ந்த மலையப்பன் கல்லூரி மாணவிகள், ஆசிரியர்கள், வனப்பணியாளர்கள் என சுமார் 200 நபர்கள் கலந்துக் கொண்டனர். மரங்கள் வளர்ப்பின் நன்மைகள் குறித்து கல்லூரி மாணவிகளுக்கு விரிவாக எடுத்து கூறப்பட்டது.
நிகழ்ச்சியில் உள்நாட்டு மரவகைகளான புங்கன், வேம்பு, வேங்கை, மகாகனி, பாதாம், இலுப்பை, தான்றி, அத்தி, கொடுக்காபுளி போன்ற வகையான 700 மரக்கன்றுகள் நடப்பட்டது. புதுக்கோட்டை வனச்சரக அலுவலர் சதாசிவம் மற்றும் வனப்பணியாளர்கள் இம்மரக்கன்றுகள் நடும் விழாவிற்கான ஏற்பாட்டினை செய்து இருந்தனர்.
