சென்னை: தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகம் மூன்றாவது பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு முதல்வர் மற்றும் பல்கலைக்கழக வேந்தர் மு.க.ஸ்டாலின் வாழ்நாள் சாதனைக்காக மதிப்புறு முனைவர் பட்டங்களையும் 1,846 மாணவர்களுக்கு கவின் கலைகளில் பட்டங்களையும் வழங்குகிறார். இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை 10 மணியளவில் தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகத்தின் மூன்றாவது பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது.
தமிழ்நாடு முதல்வர் மற்றும் பல்கலைக்கழக வேந்தர் மு.க.ஸ்டாலின் இன்று நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் திரைப்பட நடிகர் சிவகுமார், ஓவியர் குருசாமி சந்திரசேகரனுக்கு வாழ்நாள் சாதனைக்காக மதிப்புறு முனைவர் பட்டங்களையும் வழங்கிச் சிறப்பிக்கிறார். மேலும், இவ்விழாவில் 1,846 மாணவர்களுக்கு கவின் கலைகளில் பட்டங்களையும் வழங்கி விழாப் பேருரை நிகழ்த்துகிறார். இவ்விழாவில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மற்றும் பல்கலைக்கழக இணை வேந்தர் சாமிநாதன், துணை வேந்தர் சௌமியா, ஆட்சிமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், துணை மேயர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
