சமயபுரம் கோயில் நுழைவு வாயில் கட்டும் பணி விறுவிறுப்பு

சமயபுரம், நவ.27: திருச்சி மாவட்டம் சமயபுரம் நால்ரோடு பகுதியில் சமயபுரம் மாரியம்மன் கோயில் நுழைவு வாயில் கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அமாவாசை தினங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் லாடு ஏற்றி வந்த லாரி ஒன்று மோதியதில் நுழைவாயில் தூண் சேதம் அடைந்தது.

இதனையடுத்து சேதமடைந்த நுழைவாயில் முற்றிலும் அகற்றப்பட்டது. மேலும் அதே இடத்தில் புதிய நுழைவாயில் கட்டப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்திருந்தது. இதனைதொடர்ந்து ரூ.42 லட்சம் மதிப்பீட்டில் புதிய நுழைவாயில் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த ஆண்டு நவ. 13தேதி நடைபெற்றது. அதனை தொடர்ந்து கோயிலின் நுழைவு வாயில் கட்டுமான பணிகளை விரைவில் முடிக்க நுழைவாயில் உபயதாரர் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஜெய்சங்கர், முன்னாள் கோயில் இணை ஆணையர் பிரகாஷ் மற்றும் அறங்காவலர் குழு தலைவர் இளங்கோவன், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் நால்ரோடு பகுதியில் நுழைவு வாயில் தூண்கள் அமைக்க இருபுறமும் பள்ளம் தோண்டி ராட்சத கம்பிகள் கொண்டு கட்டுமான பணிகள் 50 சதவீதம் முடிவடைந்தது. தற்போது நுழைவு வாயிலின் சமயபுரம் மாரியம்மன் விநாயகர், முருகன், ஆகிய சாமி சிலைகளை அமைக்க சாரம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து கோயில் நிர்வாகம் கூறுகையில், கோயிலின் நுழைவு வாயில் விரைவில் கட்டி முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று கோயில் முன்னாள் இணை ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.

Related Stories: