புதுச்சேரியில் டிச.5ல் விஜய் ரோடு ஷோ: அனுமதி கேட்டு முதல்வர், டிஜிபியிடம் தவெக மனு

புதுச்சேரி: தவெக தலைவரும், நடிகருமான விஜய் 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலை கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கடந்த செப்டம்பரில் கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் பலினார்கள். இதன்பிறகு, ஒரு மாதத்துக்கு மேல் வெளியே வராமல் இருந்த விஜய், கடந்த சில நாட்களுக்கு முன் தனியார் கல்லூரியின் உள் அரங்கில், காஞ்சிபுரம் மக்களுடன் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தினார். மீண்டும் பொதுவெளி பிரசாரத்தை சேலத்தில் டிச.4ம் தேதி தொடங்க விஜய் திட்டமிட்டு உள்ளார். இதற்காக தவெக சார்பில் அனுமதி கேட்டு மனு கொடுக்கப்பட்டுள்ளது. அதில், எவ்வளவு பேர் கலந்து கொள்வார்கள் உள்ளிட்ட சில விவரங்கள் தெளிவாக இல்லை. மேலும், தவெக கேட்டுள்ள இடங்கள் குறுகிய இடம் என்பதால், திறந்தவெளி மைதானத்தில் நடத்த போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். ஆனால், தவெக குறுகிய இடத்தை கேட்டு அடம் பிடித்து வருகின்றனர்.

இந்நிலையில், புதுச்சேரியில் டிச.5ம் தேதி விஜய் ரோடு ஷோவுக்கு அனுமதி கேட்டு, அம்மாநில மாநில தவெக நிர்வாகி புதியவன் தலைமையில் தவெகவினர் புதுச்சேரி டிஜிபி செயலரிடம் நேற்று மனு அளித்துள்ளனர். அந்த மனுவில், ‘தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வரும் டிசம்பர் 5ம்தேதி காலை 9 முதல் மாலை 5 மணி வரை புதுச்சேரி எல்லையான காலாப்பட்டில் தொடங்கி அஜந்தா சிக்னல், உப்பளம் வாட்டர் டேங்க், மரப்பாலம், அரியாங்குப்பம், தவளக்குப்பம், கிருமாம்பாக்கம், கன்னியக்கோவில் வரை சாலை மார்க்கமாக வந்து மக்களை சந்திக்க உள்ளார். உப்பளம் சோனாம்பாளையம் வாட்டர் டேங்க் அருகே ஒலிபெருக்கி மூலமாக மக்கள் மத்தியில் உரையாற்ற உள்ளார். எனவே, தேவையான பாதுகாப்பை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்’ என குறிப்பிட்டிருந்தார். புதுச்சேரியில் 25 கி.மீ தூரம் விஜய் ரோடுஷோ நடத்த திட்டமிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து, தலைமை செயலகத்தில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்த தவெகவினர் விஜய்யின் ரோடு ஷோவுக்கு அனுமதி கேட்டு மனு கொடுத்தனர்.

Related Stories: