மது, சாப்பாட்டுக்கு பணம் தேவைக்காக குமரியில் திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்டு வந்த வாலிபர், 4 இளம் சிறார்கள் அதிரடி கைது

  • 7 பைக்குகள் பறிமுதல்
  • 30க்கும் மேற்பட்ட இடங்களில் கைவரிசை

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் பைக் திருட்டு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. இது தொடர்பான புகார்களின் பேரில் அந்தந்த காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்தநிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு, வடசேரி அசம்பு ரோட்டில் போலீசார் வாகன தணிக்கையில் இருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால், அவர்கள் வந்த பைக் ஆவணங்களை சரி பார்த்தனர். அப்போது அந்த பைக் திருட்டு பைக் என்பது தெரிய வந்தது. இதையடுத்து பைக்கில் வந்த 2 பேரை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர்.

விசாரணையில் அந்த பைக் நாகர்கோவில் மேலரதவீதியை சேர்ந்த நரேந்திரகுமார் (46) என்பவருக்கு சொந்தமானது என்றும், ஏற்கனவே இந்த பைக் திருடப்பட்டதாக கடந்த 5.7.2025 அன்று புகார் அளிக்கப்பட்டு இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து பிடிபட்ட 2 பேரிடமும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதில் அவர்கள் திருநெல்வேலியை சேர்ந்த மாரியப்பன் (22) என்பதும், மற்றொருவர் தெள்ளாந்தி பகுதியை சேர்ந்த 15 வயது இளம் சிறார் என்பதும் தெரிய வந்தது. மேலும் 2 பேரும் சேர்ந்து வன்னியூர் ஜார்ஜ் துரை என்பவரின் பைக்கை திருடியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பைக்கையும் போலீசார் மீட்டனர்.

மேலும் இருவரையும் கைது செய்தனர். இவர்கள் கொடுத்த தகவலின் பேரில், மேலும் சிலர் இவர்களுடன் சேர்ந்து ஆங்காங்கே பைக் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நடந்த விசாரணையில் ஆரல்வாய்மொழி குமாரபுரத்தில் மயிலப்பன் (63) என்பவரின் பைக்கை திருடிய இவர்களின் கூட்டாளியான அருகுவிளை கேஸ் குடோன் பகுதியை சேர்ந்த 16 வயதான இளம் சிறார் ஒருவரையும் கைது செய்தனர். அந்த பைக்கும் மீட்கப்பட்டது. இதே போல் ஈத்தாமொழி, திருவட்டார் பகுதிகளில் பைக் திருடிய இவர்களின் கூட்டாளிகளான நாகர்கோவில் பள்ளிவிளையை சேர்ந்த இளம் சிறார் 2 பேரையும் கைது செய்துள்ளனர். மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

இவர்களில் ஒருவருக்கு மட்டும் 22 வயதாகும். மற்ற அனைவரும் 15, 16, 18 வயது நிரம்பியவர்கள் ஆவர். இவர்கள் அனைவரும் தடிக்காரன்கோணத்தில் ஒரு விடுதியில் தங்கி 7ம் வகுப்பு வரை படித்து விட்டு படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் ஆவர். செலவுக்கு பணம் தேவை என்பதால் அவ்வப்போது திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்து உள்ளனர். வீடுகளில் மின் மோட்டார்களை திருடி அதன் காப்பர் கம்பிகளை ஆக்கர் கடையில் விற்று பணம் பார்த்துள்ளனர். அந்த வகையில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் மோட்டார்களை திருடி உள்ளனர். இதே போல் புத்தேரி – அப்டா மார்க்கெட் இடையே நான்கு வழிச்சாலையில் நின்று கொண்டு தனியாக வருபவர்களை தாக்கி பணம், செல்போன்களை பறித்துள்ளனர். சமீபத்தில் வடசேரி சிபிஎச் மருத்துவமனை எதிரில் மூதாட்டி ஒருவரிடம் இருந்து மணி பர்சை திருடி விட்டு தப்பி உள்ளனர்.

திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவதற்காக பைக்குகளை திருடி உள்ளனர். திருட்டு பைக்கில் சென்று திருடி விட்டு, அந்த பைக்கை சம்பவ இடத்திலேயே விட்டு விட்டு வந்துள்ளனர். முதற்கட்டமாக இவர்களிடம் இருந்து 7 பைக்குகளை போலீசார் மீட்டுள்ளனர். மேலும் நெல்லை மாவட்டத்திலும் இரு பைக்குகளை திருடியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. பொருட்களை திருடியும், வழிப்பறி செய்தும் கிடைக்கும் பணத்தில் அன்றைய தினம் மது அருந்தியும், ஓட்டல்களில் சாப்பிட்டும் வந்துள்ளனர். செல்போன்களும் வாங்கி உள்ளனர். திருட்டு கும்பலை சேர்ந்தவர்கள் இளம் சிறார்கள் என்பதால், போலீசார் செய்வதறியாமல் தவித்து வருகிறார்கள்.

Related Stories: