2026-27ம் கல்வியாண்டு முதல் பாடத்திட்டம் படிப்படியாக மாற்றம்: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

சென்னை: சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தைப் புதுப்பிப்பதற்கான உயர்மட்ட வல்லுநர் குழுவின் முதல் கூட்டம் நடந்தது. கூட்டம் முடிவடைந்த பிறகு அமைச்சர் அன்பில் மகேஷ் நிருபர்களிடம் கூறியதாவது: 2026-27ம் கல்வியாண்டில் பாடத்திட்டத்தில் என்னென்ன மாற்றங்கள் கொண்டு வரலாம் என்பது குறித்து பேசியுள்ளோம். முதலில் ஒன்று முதல் 3ம் வகுப்பு, அதன் பிறகு 4 முதல் 10ம் வகுப்பு, பின்னர் பிளஸ் 1, பிளஸ் 2 என படிப்படியாக அமல்படுத்த முடிவுசெய்துள்ளோம். அடுத்த 10 ஆண்டு கால வளர்ச்சியையும் ஏஐ உள்ளிட்ட வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சிகளையும் எதிர்கொள்ளும் வகையில் புதிய பாடத்திட்டம் உருவாக்கப்படும். இதற்கான வரைவு பாடத்திட்டம் டிசம்பரில் தயாராகும் என்று அமைச்சர் கூறினார். முன்னதாக பேசிய இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறுகையில், ‘‘அடுத்த 10 ஆண்டுகளில் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் ஏஐ தொழில்நுட்பம், டேட்டா சயின்ஸ் உள்ளிட்ட வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்களை எதிர்கொள்ளும் வகையிலும் புதிய பாடத்திட்டத்தை உருவாக்க தமிழக அரசு எடுத்துள்ள புதிய முயற்சியை பாராட்டுகிறேன்’’ என்றார்.

கூட்டத்தில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன தலைவர் நாராயணன், நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன், பள்ளிக் கல்வித் துறை செயலாளர் சந்தர மோகன், மாநில திட்டக்குழு உறுப்பினர் மற்றும் கலைத் திட்ட வடிவமைப்பு குழு தலைவர் சுல்தான் அகமது இஸ்மாயில் மொஹாலி, மாதிரிப்பள்ளிகள் உறுப்பினர் செயலர் சுதன், பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குநர் நரேஷ், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் லதா மற்றும் குழு உறுப்பினர்கள் ஆகியோர் நேரடியாகவும், இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன (ஐஐஎஸ்இஆர்) அறிவியலாளர் வெங்கடேஷ்வரன், கணித அறிவியல் நிறுவன கணிதவியல் வல்லுநர் ராமானுஜம், கலிபோர்னியா பல்கலைக்கழக மூலக்கூறு வரைகலை மற்றும் கணக்கீட்டு வளமைய உயிரியல் வல்லுநர் இயக்குநர் அழகிய சிங்கம், இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் இணையவழியாகவும் கலந்துகொண்டனர்.

Related Stories: