சென்னை: அரசு வேலைக்கு பணம் பெற்றதாக கூறி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத்துறை சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தது. அசோக்குமார் விசாரணைக்கு ஆஜராகாததால் அவருக்கு எதிராக அமலாக்கத்துறை லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்தது. இதை திரும்ப பெற அமலாக்கத்துறைக்கு உத்தரவிடக்கோரி அசோக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள் முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், வெளிநாட்டுக்கு தப்பிச் செல்வதை தடுக்க லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. ஒன்பது முறை நோட்டீஸ் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்றார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், லுக் அவுட் நோட்டீஸ் இன்னும் நீடிக்க வேண்டுமா என்று கேள்வி எழுப்பியதுடன் இந்த மனுவுக்கு பதிலளிக்குமாறு அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை மூன்று வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
