ஜோலார்பேட்டை: வீடு கட்ட பள்ளம் தோண்டியபோது வெண்கலத்தால் ஆன முருகன் சிலை கண்டெடுக்கப்பட்டது. இதையறிந்த அப்பகுதியினர் கற்பூரம் ஏற்றி முருகனை தரிசனம் செய்தனர்.திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுகா புதுப்பேட்டை அன்னசாகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி ருக்குமணி. இவர்கள் தனது வீட்டருகே உள்ள நிலத்தில் வீடு கட்ட முடிவு செய்தனர். இதற்காக நேற்று கட்டிட தொழிலாளர்கள் அஸ்திவாரம் போடுவதற்காக பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டனர். சிறிது ஆழம் தோண்டியபோது அரை அடி உயரமுள்ள வெண்கலத்தால் ஆன முருகர் சிலை இருப்பதை கண்டு ருக்குமணி மற்றும் தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதையறிந்த அப்பகுதியினர் ஏராளமானோர் வந்து முருகர் சிலையை தரிசனம் செய்தனர். மேலும் சிலர் கற்பூரம் ஏற்றி பக்தி பரவசத்துடன் வணங்கினர்.
இதுகுறித்து தகவலறிந்த தாசில்தார் காஞ்சனா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். இதையடுத்து போலீசார், ருக்குமணியிடம் இருந்த முருகர் சிலையை மீட்டு தாசில்தாரிடம் ஒப்படைத்தனர். இந்த சிலை எவ்வளவு ஆண்டுகள் பழமையானது என்பது குறித்து தொல்லியல் துறையினர் ஆய்வு செய்த பின்னர்தான் தெரிய வரும் என வருவாய் துறையினர் தெரிவித்தனர்.இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீடு கட்ட தோண்டிய பள்ளத்தில் முருகன்சிலை கிடைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
